Search This Blog

Thursday, 21 December 2017

சனிப் பெயர்ச்சி பலன்கள் 2017-2020-ரிஷபம் முதல் கடகம்.




சனிப் பெயர்ச்சி பலன்கள் 2017-2020

ரிஷபம்
( கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )
    களத்திரகாரகனான சுக்கிரனை அதிபதியாகக் கொண்டு அழகர், குணவான், வட்ட முகமும், சுருண்ட கேசமும், பெண்ணின் நளினமும், இலக்கிய ரசனையும், ஸரபுத்தியும் உடைய ரிஷபராசி அன்பர்களேதங்கள் இராசிக்கு வாக்கிய கணிதப்படி 19 - 12 2017 – செவ்வாய் கிழமை காலை மணி 9 – 59 க்கு விருச்சிக இராசியில் இருந்து  தனுசு இராசியில் பிரவேசிக்கிறார்.  அவரின் பிரவேசம் 26 – 12 – 2020 வரை அங்கு நீடிக்கிறது. ரிஷப இராசிக்கு சனிப் பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம்.

       இராசி மண்டலத்தின் இரண்டாவது இராசியான, ரிஷபத்தை அடையாளமாகக் கொண்ட, சகல சுகங்களையும் அள்ளித்தரும் அசுர குருவான சுக்கிரனின் ஆட்சி வீடாகிய தங்கள் இராசிக்கு, பாக்கியம் மற்றும் கர்ம பாவாதிபதியான சனி பகவான் அட்டமத்தில் உலோக மூர்த்தியாக அமர்வதால் சுமாரான பலன்களையே எதிர்பார்க்கலாம். குருவின் வீட்டுக்குப் பெயர்வதால் பாதிப்புகள் ஓரளவு குறையும். தக்க சமயத்தில் இராகு கை கொடுப்பார். நீங்கள் பிறருக்கு நல்லது சொன்னாலும், செய்தாலும் தவறாகவே எடுத்துக் கொள்வர். எனவே, அடக்கி வாசியுங்கள். உறவுகளிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் எழும் ஆதலால் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவது கடினம்தான். ஆயினும், தலையை அடகு வைத்தாவது வாக்கைக் காப்பாற்றிவிடுவீர்கள். தங்கள் தனபாவாதிபதி புதனாக வருவதால் செல்வந்தர்களின் நட்பு ஏற்பட்டு எதிர்பாராத தனவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு மனைவி மூலமான பொருள்வரவு உண்டு. அலைச்சல் மிக்க பயணங்கள் அடிக்கடி அமையும். அரசுத் துறைகளின் அதிரடி சோதனைகளுக்கு ஆளாகி அபராதம் கட்ட நேரலாம். சிலர் மாமியார் வீடு சென்று கம்பி எண்ணவும் நேரலாம். பாதக, மாரக திசைகள் நடப்பவர்களுக்கு கண்டங்கள் ஏற்படலாம். பெண்களிடம் எச்சரிக்கையுடன் பழக வேண்டிய காலம். ஏனெனில், அவர்களால் அசிங்க அவமானங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. 4 க்கு 6 ஆம் இடம் ஆதலால் தாயின் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள். அவரால் சிலருக்கு எதிர்பாராத நன்மைகளும் ஏற்படலாம். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு குழந்தை பிறக்க வாய்ப்புண்டு. வம்பு வழக்குகளில் இருந்து ஒதுங்கி இருப்பதே நல்லது. பழைய கடன்களை அடைக்க புதிய கடன்கள் வாங்கக் கூடிய சூழ்நிலை உருவாகும். வேலை தேடி அலைபவர்கள் கிடைக்கும் பணியில் முதலில் அமர்ந்து கொள்வது புத்திசாலித்தனம் ஆகும். அரசு வேலைக்காக பிறரிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். எல்லாக் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும் என்று சொல்ல முடியாது. எந்த ஒரு விஷயத்திற்கும் கூசாமல் பொய் கூறும் வழக்கத்தைத் தவிர்க்கவும். தண்ணியில்லா காட்டுக்கு மாற்றிவிடுவேன் என்று சொல்வது போல் வசதிற்ற இடங்களுக்கு பணிமாற்றம் பெற்றுச் செல்ல நேரலாம். வயிற்று உபாதை, கண்ணோய் ஆகியவற்றால் அவதிப்பட நேரலாம். கடுமையான உழைப்பால் மட்டுமே தனவரவும் இலாபமும் குறைவின்றிக் கிடைக்கும். மாணவர்கள் கஷ்டப்பட்டு படித்தாலே புத்தி சாதுர்யமும், அறிவுத் திறனும் கூடும். பொன்னும் பொருளும் சேரும். கௌரவமும், அந்தஸ்தும் உயரும். பேரும், புகழும் உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் கைகூடும். என எல்லா வகையிலும் நல்ல பலன்களே உண்டாகும் என்று சொல்வதற்கில்லை.   கஷ்டங்களைக் கஷ்டங்களாகப் பார்க்காமல் மனோதைரியத்தைப் பெருக்கிக் கொள்ளுங்கள். வேற்றுப் பெண் உறவு ஏற்படலாம். சங்கடங்கள் நேரும் காலத்தில் சகோதரர்களின் உதவிகள் தடங்கல்களுடன், தாமதமாலவே கிடைக்கும். எல்லா வழிகளிலும் இவருக்குப் பிறரால் அவமானங்கள்  உண்டாகும். பிறர் கபட நாடகம் ஆடி இவரை ஏமாற்ற முற்படுவர்.  பெற்றொரின் உடல் நிலை பாதிப்பால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். இவரின் முன் கோபத்தால் பல காரியங்களும் கெடும். அதனால் ஆன்மிக வழியில் அறிவுத் தெளிவும் ஏற்படுத்திக் கொள்ள முயற்சிக்கவும்.  பொதுவாக, ஜாதகத்தில் நல்ல தசா - புத்திகள் நடந்தால் நன்மைகள் அதிகம் உண்டாகும். கோசாரமும் கை கொடுத்தால் கேட்கவே வேண்டாம். ரிஷப இராசிக்கு உலோக மூர்த்தி ஆவதால் கால் சுபராகி சுமாரான பலன்களை அளிக்கிறார் சூர்ய புத்திரன். (8) 50%. இந்த இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி உலோக மூர்த்தியாக மூன்றாம் நிலையில் அமைவதால் இரும்பினாலான விவசாய, பொறியியல் உபகரண சேர்க்கை உண்டாகி குறைந்த அளவு நன்மை அளிக்கும். இரும்பினாலான உபகரணங்கள், பொருட்களை உழவாரப் பணிக்கு, ஆலயங்களுக்குக் காணிக்கையாக செலுத்துவது நல்லது.     

       குடும்பம் மற்றும் பொருளாதாரம் – தேவையற்ற மன சஞ்சலங்கள் ஏற்படும். தான தர்மத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். பெற்றோர்களின் ஆதரவு இருந்தாலும், உடன் பிறப்புக்களிடையே ஒற்றுமையின்மை தலை தூக்கும். பழைய வாகனங்கள் வாங்கும் யோகம் அமையும்.  பல சிரமங்களுக்குப் பிறகே வெற்றிகள் கிடைக்கும். உற்றார் உறவினரின் உதவிகள் உபத்திரம் ஆகும். சிலர் பழைய வீட்டைப் புதுப்பிப்பர். திருமண முயற்சிகளில் தடைகள் ஏற்படும்.

       தொழில் மற்றும் வியாபாரம் – பழைய தொழிலை விரிவாக்கம் செய்யத் தேவையான கடன் உதவிகள் வங்கி மூலமாக பல சிரமங்களுக்குப் பிறகே கிடைக்கும். செய்தொழில் முன்னேற்றங்கள் சிறப்பாக இருக்க கடுமையாக உழைக்க வேண்டிய நிலை ஏற்படும். சிலருக்குப் புதிய தொழில் வாய்ப்புகள் பகீரத பிரயத்தனங்களுக்குப் பிறகே கிடைக்கும். சகோதரர்கள், கூட்டாளிகளுடன் செய்யும் தொழில்களில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. சிலருக்குக் கடன் அதிகரிக்கும். அதிக லாபங்களும் குறையும்.  உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும்.

       உத்தியோகஸ்தர்களுக்கு – தாங்கள் எதிர்பார்த்தபடி உத்தியோக உயர்வும், அதற்குரிய சம்பள உயர்வுகளும் அதிகாரிகளின் கடைக்கண் பார்வை இருந்தால் மட்டுமே கிடைக்கும். நீங்கள் விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் தாமதமாகவே கிடைக்கும். உடன் வேலை பார்ப்பவர்கள் உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு பொறாமை கொள்வர். வெளிவட்டாரப் பழக்கங்கள் ஓரளவு நன்மை தரும்.  அரசாங்க அதிகாரிகளின் ஆதரவு கடுமையான உழைப்பால் மட்டுமே கிட்டும். சிலருக்கு பார்க்கும் வேலையில் வெறுப்பும், விரக்தியும் ஏற்படும்.

       பெண்களுக்கு – பணிபுரியும் பெண்கள் வாகனங்களில் செல்கையில் வேகத்தைக் குறைத்து கவனமுடன் செல்லுதல் அவசியம். சிலருக்கு அரசு உதவிகள் தாமதமாகும் உயர் அதிகாரிகளின் ஆதரவால் பணி உயர்வுக்கான பரிந்துரைகள் செய்யப்படலாம். கணவன்-மனைவி உறவில் கருத்து வேறுபாடுகள் மறைந்து களிப்பு உடையதாய் இருக்க மனம் விட்டுப் பேசுங்கள். உறவுகளின் நடவடிக்கைகள் ஓரளவு சீரடையும். தெய்வ வழிபாடுகள், தீர்த்த யாத்திரை செல்லுதல் போன்ற ஆன்மீக காரியங்கள் சிறப்புற நடக்கும்.
      அரசியல்வாதிகளுக்கு – வரவுகள் குறைந்தாலும், பேரும் புகழும் கூடும். சுய ஆதாயத்துக்காக, அனைவரிடமும் எளிமையாகப் பழகும் எண்ணம் தலை தூக்கும். அதேபோல் உங்களிடம் ஆதாயத்தை எதிர்பார்த்து எப்போதும் ஒரு கூட்டம் உங்களையே சுற்றிச் சுற்றி வரும். குடும்பத்தினர் உங்களைப் புரிந்துகொண்டு உதவுவர். மேல்மட்ட நிர்வாகிகளின் ஆதரவு குறையும் நிலை ஏற்படும்.
       மாணவர்களுக்கு – பள்ளிக் கல்வி முடித்தவர்களுக்கு கல்லூரிக் கல்வி கற்பதில் பல இடைஞ்சல்கள் ஏற்படும். வேலைக்கான நேர்காணலில் எடக்கு மடக்கான கேள்விகளுக்கு பதில் அளித்து பின்னரே வெற்றி கிட்டும். சிரமம் மிக்க நீண்ட பயணங்களை மேற்கொள்ள நேரும். காதல் விவகாரங்களில் பல திடுக்கிடும் திருப்பங்கள் ஏற்படலாம்கல்வியில் உயர்வும்,  போட்டிகளில் வெற்றிகளும் குவியும். கல்வி ஸ்தாபனத்துக்கும், பெற்றோர்களுக்கும் தங்கள் திறமையால் பெருமை சேர்ப்பர்.
       கலைஞர்களுக்கு – பிறவி நடிகர்களான நீங்கள் தேடி வரும் வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வது நல்லது. புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆவது உங்கள் கையில்தான் உள்ளது. சின்னத் திரையில் உள்ளவர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். இணைந்து பணிபுரியும் கலைஞர்களின் பொறாமை குணம் கவலை அளிக்கும். குடுப்பத்திலும், வெளிவட்டாரத்திலும் உங்கள் மதிப்பும் மரியாதையும் கூடும்.
      
       பார்வை பலன்கள்
         3 ஆம் பார்வையாக கர்ம பாவத்தையும், 7 ஆம் பார்வையாக தன பாவத்தையும், 10 ஆம் பார்வையாக புத்திர பாவத்தையும் நோக்குகிறார் சனி பகவான்.
         3 ஆம் பார்வையாக 10 இடத்தைப் பார்வை செய்வதால் சுப, அசுப பலன்கள் இணைந்த கலப்பு பலன்களாகவே இருக்கும். அரசுப் பணியில் உள்ளவர்களுக்குப் பல அலைச்சல்கள், அல்லல்களுக்குப் பிறகே பதவி உயர்வு, தேவையான இடத்திற்கு இடமாற்றம் ஆகியவை ஏற்படும். சிலருக்கு அலுவலகத்தில் இதுவரை இருந்து வந்த மதிப்பும், மரியாதையும் குறைந்து, ஓரங்கட்டப்படுவதால் உள்ளம் பரிதவிக்கும். தொழில், வியாபாரம் செய்வோருக்கு சாண் ஏறினால் முழம் சருக்கும். அரசாங்க அதிகாரிகளால் அச்சமும், தொல்லைகளும் அதிகரிக்கும். வேலை இன்றி இருந்தவர்களுக்கு பல சிரமங்களுக்கிடையே புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். கிடைத்த வேலை திருப்திகரமாக இல்லாவிட்டாலும் அனுசரித்துச் செல்வது நல்லது. 10 ஆம் இடம் அரசு, புகழ், கௌரவம், அந்தஸ்து ஆகியவற்றைக் கொடுத்து அதில் சில குறைகளையும் தருவான் கர்மகாரகன்.

         7 ஆம் பார்வையாக 2 ஆம் இடத்தைப் பார்வை செய்வதால் பண விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம். இதுநாள் வரை உங்களுக்கு சாதகமாக இருந்த நெருங்கிய உறவுகளே  பாதகமாக செயல்படுவார்கள். குடும்பத்தில் பல்வேறு விதங்களிலும் கலகங்களும், ஒற்றுமையின்மையும், குழப்பங்களும் ஏற்படும். நேர்மையான வழியினின்று மாறி, பணம் சம்பாதிக்கும் ஆசை எழுந்தால் அல்லல் பட நேரும். எனவே, பேராசையைக் குறைத்துக் கொள்ளுங்கள். சிலருக்கு, எதிர்பாராத விதமாக தனவரவு ஏற்பட வாய்ப்பு உண்டு. வெளி நபர்களிடம் தேவையற்ற விஷயங்களை பேசாதிருப்பது நல்லது. சுருக்கமாகச் சொன்னால் வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொள்ளக்கூடாது. உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். சிலருக்கு பணப் புழக்கம் அதிகரித்து, கொடுக்கல் வாங்கலும் சீராக இருக்கும்.   
          10 ஆம் பார்வையாக 5 ஆம் இடத்தைப் பார்வை செய்கிறார் பாஸ்கரன் புதல்வர். இதன் காரணமாக குழந்தைகளின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் எடுத்துக் கொள்ளவேண்டிய சூழ்நிலை எழும். ஒழுக்கமற்ற பெண்களின் உறவால் பெயர் கெடும். பணவிரயமும் ஏற்படும். சந்தேகத்தால் உங்களைச் சுற்றி ஏதோ சதி நடப்பதுபோல் உணர்வீர்கள். பூர்வீக சொத்துக்களில் பிரச்சனைகள் வந்து சரியாகும். சிலர் செல்வங்களின் வகையில் செலவுகள் ஏற்பட்டு புதிய கடன்கள் வாங்க நேரும். சுப காரியங்களையும், சந்தோஷ நிகழ்வுகளையும் மிகுந்த சிரமத்திற்குப் பிறகே சிறப்பாக முடிக்க முடியும். குழந்தை பாக்கியத்தில் சில தடை தாமதங்கள் ஏற்பட்டு பின் புத்திர பாக்கியம் ஏற்படும். உல்லாசப் பயணங்களில் சற்று பிரச்சனைகள் ஏற்பட்டு, பின் மகிழ்ச்சிகரமானதாக அமையும். வேலை மாற்றங்கள், பதவி இறக்கங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. எவரை நம்பியும் கடன் கொடுத்துவிடாதீர்கள். கொடுத்தால் திரும்ப வாங்குவது கடினமாகிவிடும். காதல் விவகாரங்கள் துவக்கத்தில் தொல்லை கொடுத்தாலும், முடிவு சுகமாகவே இருக்கும்.

        பரிகாரங்கள் – கும்பகோணம், நாச்சியார் கோவில் அருகிலுள்ள திருநாரையூரில் வலது புறம் ஜேஷ்டா தேவி எனும் நீலாதேவியும், இடப்புறம் மந்தாதேவி சமேதராய், மந்தாதேவி பெற்றெடுத்த குளிகன், மாந்தியுடன் குடும்ப சகிதம் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சனிபகவானை, குடும்ப சகிதம் சென்று அர்ச்சனை அபிஷேகங்கள் செய்து வேண்டி எள் விளக்கேற்றி வணங்க தோஷங்கள் விலகி சுபிட்சம் அடைவீர்கள். சனிக்கிழமை தோறும் அஞ்சன புத்திரன் ஆஞ்சனேயரை வழிபடுதல் சிறப்பு.  

மிதுனம்

(மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)
       கல்விக் காரகனான புதனை அதிபதியாகக் கொண்டு புத்திசாலித்தனம், சாதுர்யம், சாமர்த்தியம், இனிமையான பேச்சு, இரட்டை குணம், மாறும் சுபாவம், வேகமான நடை, வாய் ஜாலம் மிக்க வருமான மிதுனராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு  வாக்கிய கணிதப்படி 19 - 12 2017 – செவ்வாய் கிழமை காலை மணி 9 – 59 க்கு விருச்சிக இராசியில் இருந்து  தனுசு இராசியில் பிரவேசிக்கிறார்.  அவரின் பிரவேசம் 26 – 12 – 2020 வரை அங்கு நீடிக்கிறது. மிதுன இராசிக்கு சனிப் பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம்.
   
     காலபுருஷ தத்துவத்தின் மூன்றாவது இராசியான மிதுன இராசிக்கு அதிபதி புதன் ஆவதால் புத்தி கூர்மை, ஞானம் அதிகம் பெற்றவர்களாகத் திகழ்வீர்கள். அனைவரிடமும் எளிதாகப் பழகக் கூடியவர்களாக, நட்புக்காகவே பாடுபடக்கூடிய எண்ணம் உடையவர்கள் நீங்கள். பகை வீடான விருச்சிகத்தில் இருந்து நட்பு வீடான தனுசுக்கு சஞ்சரிக்கப்போகும், உங்கள் இராசிக்கு நட்புக்கிரகமான சனி 7 ஆம் இடத்தில் இருப்பது கண்டச் சனி காலமாகும். மூர்த்தி நிர்ணயப்படி உங்கள் இராசிக்கு தாமிர மூர்த்தியாகி முக்கால் பங்கு சுப பலன்களைத் தருவதால் நன்மையான பலன்களையே தருவார். குருவின் நிலையும் சிறப்பாகவே உள்ளது. உங்கள் இராசிக்கு 8, 9 க்கு உரிய சனி 7 ஆம் பாவத்தில் சஞ்சரிப்பதால் விருப்பத்திற்கு மாறக பணியிட மாற்றம் ஏற்பட்டாலும், அதன் மூலம் ஆதாயம் ஏற்படக் கூடிய சூழ்நிலையே உருவாகும். குரு வீட்டில் சஞ்சரிப்பதால் அடிக்கடி ஆன்மிகப் பயணங்களை மேற்கொள்வீர்கள். அப் பயணங்களில் தடைகள் ஏற்பட்டாலும் தெய்வ அனுகூலம் கிட்டும். 7 இல் பலம் பெற்ற சனி உங்கள் இராசியைப் பார்ப்பதால் உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத யோகங்களும் ஏற்படும். உங்களது தனித் திறமைகள் வெளியுலகுக்குத் தெரியவரும். அதன் காரணமாக உங்கள் மதிப்பு மரியாதை கூடும். கொடுக்கல் வாங்கலில் சிறப்பான நிலைகள் ஏற்படும். தாயாரின் அன்பும் ஆசியும் கிட்டும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகி நிம்மதியான, மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். பிரச்சனைகள் வரும் போது எவராவது உதவிக்கு வந்து சேருவார்கள். சிலர் வீட்டுக்குத் தேவையான நவீன உபகரணங்களை தவணை முறையிலேனும் வாங்கி மகிழ்வீர்கள். உயர் கல்வி பயிலும் வாய்ப்பு ஏற்படும். எவருக்கும் பணம் கொடுப்பதோ, ஜாமீன் கையெழுத்துப் போடுவதோ கூடாது. சிலருக்கு நிம்மதி, சுகத்தைக் கெடுத்தாலும் வனவாசமாய் இருந்த வாழ்க்கையை தனவாசம் மிக்கதாக மாற்றி விடுவார்இன்னல்களை நீக்கி இன்பம் தருவார். அழகும் பொலிவும் கூடும், வாக்குவன்மை அதிகரிக்கும். புத்தி தெளிவும், அறிவுக் கூர்மையும் ஏற்படும். பெயரும் புகழும் ஓங்கும். வேலை இல்லாது இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு. பதவி, அந்தஸ்து உயரும்சிலருக்கு சீரணக் கோளாரினால்  வயிற்று உபாதைகளும் ஏற்படலாம். எனவே, எச்சரிக்கையுடன் உணவருந்துவது அவசியம். சிலருக்கு, பயமும், தீராத சங்கடங்களும் ஏற்படும். பொருட்கள் நஷ்டமாகும். கண்ணில் நோய் காணும். ஆசாரக் குறைவாக நடப்பார். சிந்தை தெளிவின்றி குழம்பிய நிலையில் இருப்பார். மனைவி இதுசமயம் அனுகூலமாக நடந்து கொள்வாள். பொதுவாக, ஜாதகத்தில் நல்ல தசா - புத்திகள் நடந்தால் நன்மைகள் அதிகம் உண்டாகும். கோசாரமும் கை கொடுத்தால் கேட்கவே வேண்டாம். மிதுனம் - தாமிர மூர்த்தி ஆவதால் முக்கால் பங்கு சுபராகி நன்மை அளிக்கிறார்.(7) 75%. இந்த இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி தாமிர மூர்த்தியாக இரண்டாம் நிலையில் அமைவதால் செம்பாலான  பாத்திரங்கள்  சேர்க்கை உண்டாகி நன்மை அளிக்கும். செப்பு பாத்திரங்களை ஆலயங்களுக்குக் காணிக்கையாக செலுத்துவது நல்லது.

       குடும்பம் மற்றும் பொருளாதாரம் - சகோதர நன்மை, வெற்றி மற்றும் சந்தோஷமும் உண்டாகும். சிலருக்குப் பிரிவும், வீண் செலவுகளும் ஏற்படலாம். உழைப்பு அதிகமாகி அதற்கேற்ற ஆதாயம் இராது. சாமர்த்திய சாலியாக விளங்குவார். தனவிருத்தியில் தடைகள் ஏற்படலாம். பிள்ளைகளால் அதிகத் தொல்லைகள் எழலாம். 5 இல் குரு சஞ்சரிப்பதால் பெரியோர், ஞானிகளின் தரிசனம் கிட்டும்.
         தொழில் மற்றும் வியாபாரம் – கொடுத்த வாக்கும், நாணயம் தவறுதலும் ஏற்படும். எதிர்கால தொழில் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு விரிவாக்கத் திட்டங்களில் முதலீடுகள் செய்வது ஏற்றம் தரும். முதலீடுகளுக்கு வங்கிக் கடன்கள்  சுலபமாகக் கிடைக்கும். ஆயினும் அதிகமாகக் கடன் வாங்கவோ, கடன் கொடுக்கவோ கூடாது. அரசின் உதவிகள் கைகொடுக்கும்எதைச் செய்தாலும் சிரத்தையுடன் செய்தால் வெற்றி உண்டு. விவசாயப்பணிகள் சிறப்புற நடந்து ஆதாயம் ஓரளவு பெருகும்வியாபாரத்துக்குத் தேவையான பொருட்களை மட்டும் வாங்கி இருப்பு வைத்துக் கொள்வது நல்லது. சிலருக்குக் கடன் கொடுத்தவர்களால் பிரச்சனைகள் எழலாம்
        உத்தியோகஸ்தர்களுக்கு – அரசுப் பணியாற்றுபவர்களுக்கு வேலையில் உயர் அதிகாரிகளால் பிரச்சனைகள் எழலாம். சில நேரம் அவர்கள் கண்டிப்புடன் நடந்து கொள்வர். நண்பர்களிடம் அடிக்கடி கைமாத்து, கடன் வாங்குவீர்கள். அதுபோல் தேவையற்ற வகையில் அடிக்கடி விடுமுறை எடுப்பீர்கள். உங்கள் உழைப்புக்கு உரிய மரியாதை கிடைக்காது. ஓய்வின்றி உழைக்க வேண்டிய நிலை ஏற்படும். 
        பெண்களுக்கு ; யாத்திரையும், வெளிநாட்டுப் பயணங்களும் ஏற்படும். தொலைதூரச் செய்திகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும் என்று சொல்வதற்கில்லை. சிலருக்குத் தாங்கள் விரும்பாத இடத்திற்கு மாற்றம் ஏற்படலாம். குழந்தைகளின் தேர்ச்சி மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும். பணியிடத்தில் உங்கள் நிலை பதட்டம் மிக்கதாகவே இருக்கும். கடும் முயற்சிகளுக்குப் பிறகே நல்ல வரன் அமையும்.
       மாணவர்களுக்கு ; மாணவர்கள் அதிக அக்கறையுடன் படிக்கவேண்டும்.  கிரிக்கெட் ஆட்டங்களைக் கண்டால், கல்வியும் ஆட்டங்காணும். அவர்களின் கவனம் இன்ப நுகர்விலும், விளையாட்டுத் தனங்களிலும் ஈடுபட்டால் அறிவுத்திறனும், கல்வியில் தேர்ச்சியும் குறையும்ஒரு சிலர் படிப்பை ஏதாவது காரணத்தால் விட்டுவிட நேரும். பல பிரச்சனைகளுக்குப் பிறகே வெளிநாடு சென்று கல்வி கற்கும் எண்ணம் நிறைவேறும்.
       அரசியல்வாதிகளுக்கு  - அரசியலில் செல்வாக்குக் குறையும். சிறிது காலம் பொறுமையுடன் காத்திருந்து செல்வாக்கை உயர்த்த வேண்டிய வழிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். தொண்டர்களின் மனம் அறிந்து அவர்களுக்கு ஆதரவு அளித்தால் உங்கள் புகழ் ஓங்கும். தேவையற்ற விவகாரங்களில் பணத்தைச் செலவிடாது இருந்தால் பண இழப்பைத் தவிர்க்கலாம்.
       கலைஞர்களுக்கு – உங்களுக்குப் பின்னர் வந்த, உங்களைவிட அனுபவத்தில் குறைந்தவர்களெல்லாம் அதிகம் சம்பாதிப்பார்கள். அதைக் கண்டு மனம் வருந்த நேரும். அதனால் கடனகளும் வாங்க நேரும். சிலருக்கு அவர்கள் பேரில் வலம் வரும் கிசுகிசுக்களால் அவமானப்பட நேரும். புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும் போது மனதில் மகிழ்ச்சி நிலவும்.  கட்சியில் உங்கள் நிலை திரிசங்கு சொர்க்கமாகவே இருக்கும்.
      
பார்வை பலன்கள்
         3 ஆம் பார்வையாக பாக்கிய பாவத்தையும், 7 ஆம் பார்வையாக இராசியையும் 10 ஆம் பார்வையாக சுக, மாத்ரு பாவத்தையும் நோக்குகிறார் சனி பகவான்.
         3 ஆம் பார்வையாக உங்கள் இராசிக்கு 9 ஆம் இடத்தைப் பார்ப்பதால் வேலை மாற்றங்கள் ஏற்படும். ஒரு சிலருக்கு பணி நிமித்தமாக வெளிநாடு செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகும். தந்தையின் அன்பும் ஆதரவும் இருக்கும். அவரின் ஆரோக்கியம் குறித்த மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். குடும்பத்தில் பேரன், பேத்தி, மருமகன், மருமகள் என புதிய உறவுகள் வந்து சேரும். சிலருக்குக் கல்வியில் தடைகள் உண்டாகி பின்னர் வெற்றி உண்டாகும். ஆலய தரிசனம், பெரியோர், ஆச்சாரிய தரிசனம் ஆகியவை ஏற்பட்டு மனதில் அமைதி நிலவும். புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு தெய்வ அருளால் அந்த பாக்கியம் ஏற்படும். சிலருக்கு பண விரயங்கள் ஏற்படும் வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனமாகச் செல்லவும்.  வாழ்க்கை முன்னேற்ற பாதையில் நல்ல வாய்ப்புகள் கவனக்குறைவால் கைநழுவும்.
         7 ஆம் பார்வையாக சனி உங்கள் இராசியைப் பார்ப்பதால் நீங்கள் முயற்சிக்கும்  அனைத்துக் காரியங்களில் இருந்து வந்த குளறுபடிகள், கோளாறுகள், குறைபாடுகள், குழப்பங்கள், முட்டுக் கட்டைகள் அனைத்தும் விலகி வெற்றி கிட்டும். வெளிவட்டாரப் பழக்கங்களில் இருந்து கலகலப்பான, சாதுர்யமான, சாமர்த்தியமான பேச்சு வார்த்தைகளால் சந்தோஷம் ஏற்படுவதற்கான சந்தர்பங்கள் அமையும். பல வழிகளிலும் பணவரவும் அதிகரிக்கும். தேவையற்ற விவகாரங்களில் மூக்கை நுழைக்காதிருப்பது அவசியம். அதுவே பாதி சிக்கல்களைத் தீர்த்துவிடும். காதல் விஷயங்களில் வெற்றி கிட்டும். உங்களைப் பற்றிய வீண் வதந்திகள் பரவி தேவையற்ற பிரச்சனைகள் எழும். சிலருக்குப் பரம்பரை சொத்துக்கள் வந்து சேரும். மனைவி வழியிலும் வருமானம் அதிகரிக்கும்.
          10 ஆம் பார்வையாக 4 ஆம் இடத்தைப் பார்ப்பதால் பணவசதி கனகச்சிதமாக இருக்கும். திருப்திகரமாகவும் இருக்கும். தாய் வழி உதவிகள் வந்து சேரும். தாயின் உடல்நிலையில் அக்கறை அவசியம். வீடு, மனை, நிலம் போன்ற அசையா சொத்துகள் வாங்கும் யோகம் ஏற்படும். வாழ்க்கையில் புதுதெம்பும் புதிய உற்சாகமும் பிறக்கும். வியாபாரம், தொழில் எதுவானாலும் கணிசமான இலாபம் கிடைக்கும். ஸ்தம்பித்துப் போன ஜீவன உபாயங்கள் மீண்டும் துளிர்த்து எழும். அவற்றில் எதிர்பார்த்த முன்னேற்றங்களும் இருக்கும். சிலருக்குத் தொழிலில் நிச்சியமற்ற தன்மை நிலவும். உற்பத்தி சார்ந்த துறைகளில் ஆரம்பத்தில் சுணக்கம் ஏற்பட்டாலும் பின்னர் இலாபம் அதிகரிக்கும். சிலருக்கு உயர்கல்வி பயில இருந்த தடைகள் நீங்கி கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். உணவுக் கட்டுப்பாட்டோடு, உடல் நிலைபற்றிய கவனமும் தேவை.   


       பரிகாரங்கள் – திருவாரூர் அருகில் திருத்துறைப்பூண்டியில் உள்ள விக்ரபாண்டியம் என்ற கிராமத்தில் உள்ள திருக்கொள்ளிக்காடு ஸ்தலத்தில் அக்னீஸ்வர்ரை வேண்டி, சனிபகவான் வரம் பெற்ற தலம் இது. சிவன் சனியை பொங்கு சனியாக மாற்றி இனி இங்கு வரும் பக்தர்களுக்கு தோஷம் அகலும் என்று அருளிய இத்தலத்தில் வேண்ட சனியினாலான பாதிப்புகள் குறையும்.


கடகம்
(புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)
       தாய் காரகனான சந்திரனை அதிபதியாகக் கொண்டு, வாக்கு வன்மை, சாமர்த்திய பேச்சு, இரக்ககுணம், தனவான், வட்ட முகம், விரைந்த நடை, சஞ்சலம், ஸ்திர தன்மையற்றவருமான, எப்போதும் வீட்டோடு முடங்கிக் கிடக்கும் கடகராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு வாக்கிய கணிதப்படி 19 - 12 2017 – செவ்வாய் கிழமை காலை மணி 9 – 59 க்கு விருச்சிக இராசியில் இருந்து  தனுசு இராசியில் பிரவேசிக்கிறார்.  அவரின் பிரவேசம் 26 – 12 – 2020 வரை அங்கு நீடிக்கிறது. கடக இராசிக்கு சனிப் பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம்.
      
       கடக இராசிக்கு ருண, ரோக, சத்ரு, சேவை மற்றும் வெற்றி ஸ்தானமான  6 ஆம் வீட்டில் சஞ்சரிக்கப் போகும் சனி பகவான் இதுவரை கஷ்டங்களும், நஷ்டங்களும் சகஜமாகி போன,. சோம்பலும், சலிப்பும் ஏற்பட்ட போராட்ட வாழ்க்கையில் இருந்து தற்போது தங்களுக்கு வெற்றியின் அருமையை உணரவைக்கும் சாதகமான நிலைக்கு வந்துள்ளார். இதனால் எல்லா வகையிலும் பொன்னும் பொருளும் சேரும் தாய், தந்தையர் மற்றும் குடும்பத்தார் ஒத்துழைப்பு, உதவிகள் கிடைக்கும். புது வீடு கட்டுவீர்கள். அந்தஸ்து, பதவி, கௌரவம், உத்தியோகம், அல்லது அதில் உயர்வு எல்லாமே தேடிவரும். பேச்சில் தெளிவு ஏற்படும். வெட்டு ஒன்று துண்டு ரெண்டாகப் பேசாமல், இடம், பொருள் ஏவல் அறிந்து தன்மையாகப் பேசி உங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். உறவுகளிடம் இதுவரை இருந்து வந்த மனக் கசப்புகள் தீர்ந்து, மனம் மகிழும். சுற்றமும், நட்பும் தேடிவந்து அன்பு பாராட்டுவார்கள். தொழிலில் முன்னேற்றமும், அதிக இலாபமும் கிடைக்கும். இந்த இரண்டரை வருடங்கள் இராஜயோகம்தான். நிறைய பணமும், வாகன வகைகளும் கிடைக்கும். அதன் காரணமாக உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் செயல் படுவீர்கள். சிலருக்குப் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். தொலைதூரச் செய்திகள் மகிழ்ச்சி தருவனவாக இருக்கும். கணவன் மனைவியிடையே அன்பும் பாசமும் பெருகும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் மறைந்து களிப்பு உண்டாகும். புத்தி சாதுர்யத்தால் வாழ்க்கையில் பொருளாதார நிலை சீராக இருக்கும். குழந்தைகள் வகையில் சுபச்செலவுகள் ஏற்படும். மணவாழ்க்கையும் மகிழ்ச்சி நிறைந்ததாக அமையும். வியாபார நிலவரங்களுக்கு ஏற்ப புதிய நுணுக்கங்களைப் புகுத்தி வியாபாரத்தில் ஆதாயம் காணலாம். உதிரிப் பாகங்கள் அல்லது மென்பொருள் சாதனங்களின் விற்பனை சூடுபிடிக்கும்மதிப்புமிக்க மனிதர்களின் நட்பு கிடைக்கும். கூட்டுத் தொழிலில் எச்சரிக்கை தேவை. வங்கிக் கடன் முயற்சிகள் வெற்றி பெறும். தொழிலில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். தொழிலாளர்களை தட்டிக் கொடுத்து வேலைவாங்கினால் முன்னேற்றம் இருக்கும். அரசு ஊழியர்களுக்கு, மற்றவர்களுக்கு கட்டளையிடும் தலைமைப் பதவி கிடைக்கும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் மனமறிந்து நடந்தால் ஆதாயம் பெருகும். எதிர்கால தொழில் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு விரிவாக்கத் திட்டங்களில் முதலீடுகள் செய்வது ஏற்றம் தரும்.       பொதுவாக, ஜாதகத்தில் நல்ல தசா - புத்திகள் நடந்தால் நன்மைகள் அதிகம் உண்டாகும். கோசாரமும் கை கொடுத்தால் கேட்கவே வேண்டாம். இந்த இராசிக்கு    சுவர்ண மூர்த்தி ஆவதோடு சுபமும்  அளிப்பதால்  மிகுந்த நன்மை ஏற்படுகிறது. (6) 95%இந்த இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி முறையே சுவர்ண மூர்த்தியாக இருந்தாலும் சுபம் தரும் இராசிகளில் இருப்பதால் சொர்ண ஆபரணங்கள், அணிகலன்கள் சேர்க்கை உண்டாகி நன்மை அளிக்கும்.     

       குடும்பம் மற்றும் பொருளாதாரம் ; பொருளாதார நிலைகள் சீராகி வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். காரியங்கள் அனைத்தும் வெற்றி பெரும். கணவன் மனைவி இருவரின் பக்தி மீதான நம்பிக்கையால் வாழ்க்கையில் மனகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்திற்கு அதிகப்படியான வருமானம் கிடைக்கும். வெளிநாட்டுப் பயணங்களும் அதனால் லாபமும் ஏற்படும். அனைத்து வசதிகளுடன் கூடிய தனி வீடு அமையும். பக்தி மார்க்கத்தில் அதிக ஈடுபாடு ஏற்படும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். மனைவியின் பக்தி மார்க்கம் உங்களின் மத உணர்வைத் தூண்டும். பழைய பகை மறைந்து புதிய நட்பு மலரும்.
         தொழில் மற்றும் வியாபாரம் ; உத்தியோகம், வியாபாரம், தொழில் ஆகியவற்றைச் செய்பவர்களுக்கு மிகுந்த அனுகூலமான காலமாகும்வங்கிக் கடன்களும், அரசு உதவிகளும் கிடைக்கும். விவசாயப் பணிகளால் ஆதாயம் பெருகும். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் எதிர்பார்த்த இடத்திற்குக் கிடைக்கும். தங்கள் முதலீடுகளை வேறு புதிய திட்டங்களில் முதலீடு செய்ய முனைவீர்கள். வீட்டு உபயோகப் பொருட்களின் வியாபாரம் அதிகரிக்கும்தோல் பொருள் வியாபாரிகளுக்குத் தேங்கிக்கிடந்த பொருட்கள் விற்பனையாகி இலாபம் பெருகும்.
       உத்தியோகஸ்தர்களுக்கு – அரசுப் பணி பரிபவர்களுக்கு அவ்வப்போது அவர்களின் பணிகளில் தடைகள், தாமதங்கள் ஏற்படும். பணி நிமித்தமான வெளியூர் அலைச்சல்கள் ஏற்படும். வேலையின்றி பல நாட்களாய் தவித்தவர்களுக்கு நல்ல அரசுப் பணிக்கான உத்தரவு வரும். உடன் பணிபுரிபவர்களின் போட்டி, பொறாமைகளில் சிக்கித் தவிக்க நேரலாம். உத்தியோக நிமித்தமாக வெளியூர் செல்ல நேரலாம். புதிய இடத்தில் மதிப்பு, மரியாதை கூடும். உடன் பணிபுரிபவர்கள் ஒதுங்கி நிற்காமல், மனம் உவந்து உதவிக்கு வருவர்.
       பெண்களுக்கு; உங்கள் நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். மணமாலையும் மஞ்சளும் கூடி, மங்கையர் மண மேடையில் உலாவருவர். கணவன் உங்கள் மீது அன்பைப் பொழிவார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தங்களைப் பற்றி புறம் பேசுவார்கள். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கும் யோகம் ஏற்படும். பணிபுரியும் பெண்களுக்கு  மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்களுக்கு எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும். அரசுப்  பணிபுரியம் பெண்களுக்குப் பெண் உயர் அதிகாரிகளால் நெருக்கடி ஏற்படலாம்.   
      மாணவர்களுக்கு - அறிவுத் திறன் பெருகும். சிலருக்கு, கல்வியில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். கிரிக்கெட், முகநூல், வலைத்தளங்களில் பொழுதைக் கழிக்காமல் படிப்பின் மீது கவனம் செலுத்தினால் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறலாம். உயர் கல்வி யோகம் உண்டாகும். பெற்றோரும், ஆசிரியர்களும் மகிழும் வண்ணம் நல்ல பெயர் எடுப்பீர்கள். தீய நண்பர்களின் சவகாசத்தை ஒதுக்கி கல்வியில் அக்கறை கொள்ளவேண்டும்.
       அரசியல்வாதிகளுக்கு – உங்கள் காட்டில் இனி மழைதான். நீங்கள் நினைதத்தெல்லாம் நடக்கப்போகின்றது. பேரும் புகழும் கிடைக்கும். உயர்பதவிகள் தங்களைத் தேடிவரும். அடிக்கடி பயணங்களும், வெளியூரில் தங்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். அதிகாரிகளின் ஒத்துழைப்புக்கள் தவறாது கிடைக்கும். தொண்டர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. அவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளை செய்து கொடுத்து ஆதரிப்பது சிறப்பு ஆகும்.
       கலைஞர்களுக்கு – கலைத்துறையில் உள்ளவர்களுக்கு அதிகமான வாய்ப்புகள் கைக்கு வந்து சேரும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்து  ஆகும். அதில் வரும் நல்ல வாய்ப்புகளைத் தவறவிடாதீர்கள். பணமும் புகழும் உங்கள் கண்ணை மறைக்கும். அதனால் தவறான உறவுகள், லாகிரி வஸ்துக்களை உபயோகித்தல் போன்றவற்றால் உங்கள் மதிப்பை நீங்களே கெடுத்துக் கொள்ளாதீர்கள்.
பார்வை பலன்கள்
         3 ஆம் பார்வையாக ஆயுள் பாவத்தையும், 7 ஆம் பார்வையாக விரய பாவத்தையும் 10 ஆம் பார்வையாக தைரிய, வீரிய, இளைய சகோதர பாவத்தையும் நோக்குகிறார் சனி பகவான்.
         3 ஆம் பார்வையாக 8 ஆம் இடத்தைப் பார்வை செய்வதால் போக்குவரத்தில் கவனம் தேவை. தொழிலில் பெரிய அளவில் இலாபம் இராது என்பதால், இருப்பதை விட்டு பறப்பதை பிடிக்க நினைக்காமல், கையில் உள்ளதை வைத்துக்கொண்டு முன்னேற முயல்வது அறிவுடமையாகும். மற்றவர்களுக்காக மறந்தும் கூட ஜாமீன் கையெழுத்து இடவேண்டாம். வேலையாட்கள் மூலம் சிறுசிறு பிரச்சனைகள் எழலாம். அரசு வகையில் அனுகூலம் கிடைப்பது கடினமே. 8 ஆம் இடம் என்பது அசிங்கத்தையும் அவமானங்களையும், வேதனைகளையும், சோதனைகளையும், கஷ்டங்களையும் குறிப்பதால் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். சிலருக்கு மனைவியின் மூலமான வருமானம் அதிகரிக்கும். இன்ஷியூரன்ஸ், வங்கி வட்டி, பங்குச்சந்தை மூலமாக பிறர் பணம் உங்கள் கைகளில் தவழும்.
         7 ஆம் பார்வையாக விரய பாவத்தை பார்வை செய்வதால் தேவையற்ற பிரச்சனைகளைத் எழலாம். புதிய சூழலில் வசிக்க வேண்டிய நிலை உருவாகலாம். பணி காரணமாக சிலர் குடும்பத்தை விட்டுப் பிரிய நேரலாம். தீடீர் வைத்தியச் செலவுகளால் பொருளாதார சறுக்கல்கள் ஏற்படலாம். அடிக்கடி தேவையற்ற பயணங்கள் மேற்கொள்ள நேரும்.  தொழில் மந்தம், தொழிலாளர்களின் ஒத்துழைப்புக் குறைவு, உத்தியோகத்தில் சறுக்கல்கள், சக ஊழியர்களின் ஆதரவு இன்மை ஆகியவை பிரச்சனைகளைத் தரலாம். நண்பர்களே பகைவர்கள் ஆவர். உங்களால் பயன் அடைந்தவர்களே தக்க சமயத்தில் உங்கள் காலைவாரிவிடுவர். முகம் தெரியாத நபர்களிடம், உங்கள் இரகசியங்களைக் கூறாமல் இருப்பது நல்லது,
         10 ஆம் பார்வையாக 3 ஆம் பாவத்தைப் பார்ப்பதால் உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற்று உங்கள் வாழ்க்கை முன்னேற்றகரமான பாதையில் செல்லும். ஆரம்பத்தில் தடைகள் ஏற்பட்டாலும், நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். உடன் பிறப்புக்களால் சிறு பிரச்சனைகள் எழுந்தாலும், அவர்களால் நற்பலன்களையும் எதிர்பார்க்கலாம். முகநூல் பொன்றவற்றில் புதிய நட்பு வட்டம் உருவாகும். நினைத்தபடி வெளிநாடு செல்லும் பாக்கியம் ஏற்படும். அரசு போட்டி தேர்வுகளில் வெற்றி கிட்டும். வேலை வாய்ப்புகளும் தேடி வரும். சிலருக்கு வயிற்று உபாதைகள் எழலாம். வாகனம் கட்டிடம் போன்றவற்றிற்கு பழுது பார்க்கும் செலவுகள் ஏற்படும்.  

       பரிகாரங்கள் –சனியால் பிடிக்க முடியாத கணபதிக்கு பிரதி சனிக்கிழமை தோறும் அருகம் புல் மாலை அணிவித்து, கொளுக்கட்டை நிவேதனம் செய்தும் அல்லது ஹனுமனுக்கு வெண்ணை சாற்றி, வெற்றிலை மாலை, வடைமாலை சாற்றி அர்ச்சனை செய்துவரலாம். ஹனுமார் சாலிசா, ஹனுமார் ஸ்தோத்திரம் சொல்லிவர தைரியம், விவேபம் கூடி நினைத்த காரியங்கள் கைகூடும். 



Friday, 13 October 2017

வியாபார/தொழில் செய்யும் ஜாதகத்தை அறிவது எங்ஙனம்.?






                   

                                                       உ


வியாபார/தொழில் செய்யும் ஜாதகத்தை அறிவது எங்ஙனம்.?

       ஒருவர் வியாபாரத்தில்/தொழிலில் ஈடுபடுவது செல்வம் சேர்க்கவே ஆகும். அன்றாட தனவரவைக் குறிப்பது ஆகும். இதனுடன் ஒப்பிடும் போது இலாபத்தைக் குறிக்கும் 11 ஆம் பாவம் வியாபாரத்திற்கு மிகவும் தொடர்புடையதாகும். எனவே, இலாபவத்தில் பலம் மிக்க கிரகம் இருப்பதும், அந்த வீட்டின் ஆட்சி கிரகம் ஜாதகத்தில் நன்முறையில் அமைவது அவசியம் ஆகும். 7 ஆம் வீடு  கூட்டாளிகளையும், வாடிக்கையாளர்களையும் குறிகாட்டுகிறது. எனவே, 7 ஆம் பாவத்துடனான 2 மற்றும் 11 ஆம் பாவத்துடனான தொடர்பு வியாபாரம் / தொழில் மூலமான வருமானத்தையும், அல்லது வாடிக்கையாளர்கள் மூமான வருமானத்தையும், இலாபத்தையும் குறிகாட்டுகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் வியாபார பாவங்கள் பலமிழந்து காணப்பட்டாலும், சரியான பலம்முள்ள ஜாதகருடன் கூட்டு வைத்து தொழில் செய்தால் சிறப்பாக அமையும். பலம் மிக்க 7 ஆம் வீடு வெற்றிகரமான வியாபாரத்தை கூட்டுத் தொழில் மூலமாகத் தந்துவிடும். 5 ஆம் வீடு,  போட்டி பந்தயங்கள், பங்குச் சந்தை நிலவரங்கள் மற்றும் முதலீடுகளையும் குறிகாட்டுகிறது. புதிய திட்டங்களில் உரிய இலாபத்தை அடைவதற்கான சக்தியை பலம்மிக்க 5 ஆம் வீடு சாதகம் ஆக்கும். பாக்கிய வீடான 9 ஆம் பாவம் அதிர்ஷ்டத்தைக் குறிக்கிறது. 9 மற்றும் 10 ஆம் பாவங்களின் அல்லது பாவாதிபதிகளின் நல்ல தொடர்பு வெற்றியை நிச்சியிக்கிறது.  ஜாதகருக்கு அடிக்கடி ஏற்படும் 12 ஆம் பாவத் தொடர்பு வர்த்தக வெற்றிகளைத் தீர்மானிக்கிறது. முதலில் விரய பாவமாகக் 12 ஆம் பாவம் காட்சி அளித்து இழப்புகளுக்கும், எதிர்புக்கும் உரியதாகத் தோற்றமளித்தாலும், 12 ஆம் வீடு அமானுஷ்யமானதாகவும், தனித்துவம் மிக்க மனிதர்களையும், புளக்கம் அதிகம் இல்லாத மறைவிடமாகவும் குறிகாட்டப்படுகிறது. ஜாதகத்தில் சுபர் தாக்கம் உள்ள 12 ஆம் இடம், தனிப்பட்ட முறையில் நமக்குத் தெரியாதவர்கள் அல்லது மறைவிடத்தில் இருக்கும் நமக்குத் தெரியாதவர்கள் மூலமாக ஆதாயம் கிடைக்கும். இது இன்டர் நெட் மூலமாக செய்யப்படும் தொழில்களுக்குப் பொருந்தும். 
       இலக்னாதிபதி பலம் இழந்தோ அல்லது மோசமான இடத்தில் இருந்தாலோ வெற்றி என்பது எட்டாக் கனி ஆகிறது. கஷ்டங்களையும் பிரச்சனைகளையும் குறிப்பது 6 ஆம் இடம் ஆகும். அது தொழில் பாவமான 10 ஆம் இடத்தோடு அல்லது அதன் அதிபதியோடு எவ்வகையிலேனும் தொடர்பு கொண்டிருந்தால் மிகவும் கஷ்டமாகும். 6 ஆம் அதிபதி / அல்லது 6 ஆம் வீடு  சிறப்பான நிலையில் இருந்தால, 6 ஆம் வீட்டின்  ஆரோக்கியம் மற்றும் சேவைக்கான காரகங்கள் அனுகூலமான பலன்களைத் தரும். அதைப்போலவே சேவைகளும் விருத்தியாகும். 8 ஆம் வீடு நிரந்தரமான கஷ்டங்களைக் குறிகாட்டுகிறது. ஆனால், இது ஒரு சாதகமான  இடம் ஏனெனில், மற்றவர்கள் பணம் மற்றும் பங்குச்சந்தைப் பணம் ஆகும். எனவே 8 ஆம் இடம், அதன் அதிபதி சிறப்பான நிலையில் பலமாக  இருந்தால் அது வியாபாரம் தொடங்குவதற்கு, பொருளாதார நிலையில் உதவும் வகையில் அமையும் அல்லது நிதி நிறுவனம் ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகளை அமைத்துத் தரும்.                                                                                                                                                                                                                                        வியாபாரம் அல்லது தொழில்நிலை ஜாதகத்தில் குரு மற்றும் சனியின் நிலை –

       ஜோதிடத்தில்  குரு, கர்மகாரகனான சனியுடன் பகிர்ந்து கொள்கிறார். குரு, விற்பனை உதவியாளரையும் சனி கணக்காளரையும் (அக்கவுண்டன்ட்) குறிகாட்டுகின்றனர். குரு எப்போதும் ஆடம்பரக் காரில் பயணிப்பவராகவும், 5 நட்சத்திர விடுதியில் தங்குபவராகவும்  இருக்கிறார். வியாபாரத்தை/தொழிலைப் நவீனமாகப் பெறுக்குகிறார் அல்லது வெளிநாட்டுச் சந்தை, கம்பெனிக் கணக்குகளையும், வாடிக்கையாளர்களையும் அதிகப் படுத்துகிறார்.  எனவே, ஜாதகத்தில் குருவும் சனியும் விலகியே இருக்க வேண்டும்.  1, 4, 7, 10 கேந்திர வீடுகள் ஆகும். இவை வியாபாரத்துக்கான செயல்பாடுகளை ஊக்குவித்து, முன்னேற்றத்துக்கான வழிகளைக் குறிகாட்டுகின்றன. சனி 3, 6, 9 அல்லது 12 ஆம் இடங்களில் அமரும் போது வியாபாரத்தைப் பின்னின்று இயக்குகிறது. உண்மையில் சனி 12 ஆம் வீட்டில் இருந்து சந்தோஷமான நிலையை அடைகிறது எனலாம். அது அதற்கு உதயத்தில் ஒளிந்து இருந்து இருளை உடைத்து வரும் ஒளி போல் மகிழ்ச்சி அளிக்கிறது.

       இந்த நிலையை கிரேஸ் மோரீஸ் விவரமாக விவரிக்கிறார். சனி கேந்திரங்களில் இருக்கக் கூடாது. சனி கேந்திரத்தில் இருந்து வீடு வாங்கினால்  அதை விற்க முடியாத நிலை உருவாகும்.  எனவே, வெற்றிகரமான வியாபாரத்திற்கு சந்திரனோ சனியோ கேந்திரத்தில் அமைவது சிறப்பல்ல. ஆனால் சந்திரன் சுப பார்வை பெற்றால் நல்லது. என்கிறார்.

       வெகு சில வர்த்தக நிறுவனங்களே, குரு – சனி இணைவு காலங்களில் தொழிலை ஆரம்பிக்கின்றன என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஜனன ஜாதகத்தில்  இந்த குரு-சனி இணைவு  போரட்டங்களில் மீளும் விதத்தில் அதிர்ஷ்டகரமானது என்றாலும், தொழிலில் மெதுவாகவே முன்னேற்றம் இருக்கும. எனவே, குரு – சனி இருவரும் வெவ்வேறு இராசிகளில் இருப்பதே நல்லது. ஆப்பிள் கம்யூட்டர் நிறுவனம் இதற்கு சரியான உதாரணமாகும், குரு – சனி இருவரும் கன்னி இராசியில் இணைந்து உள்ளனர். இதன் காரணமாக ஸ்டீவ் ஜாப்ஸ் மீண்டும் கம்பெனியை எடுத்து நடத்த வேண்டியதாயிற்று.  அதிகாரப் பொறுப்பை எடுத்துக் கொண்டு, வேகமாக முடிவெடுத்து, காலத்தோடு வேகமாக ஓடக்கூடிய திறமை மிக்கவராக இருந்தார். திட்டமிடலில் முன்னேற்ற நிகழ்வுகளில், விளம்பரம் மற்றும் விற்பனை விவகாரங்களில் எந்தவித நிர்வாகத் தலையீடுகளுக்கும் இடம் தராமலும், ஒரு செயலை இப்படித்தான் செய்ய வேண்டும் என்ற கோட்பாடுகள் இன்றியும் கம்பெனியைத் திறமையாக, இலாபகரமாக நடத்தினார்.

பல்வேறு வீடுகளில் சனியின் தாக்கம்.

              ஜாதகத்தில் தொழில் நிலையைப் பொருத்தவரை, சனியின் தாக்கத்தை அறிவோம். 3ஆம் வீட்டில் சனி இருக்க கார் தொழில் செய்பவர்களுக்கு இலாபம் இருக்காது. 6 ஆம் வீட்டில் சனி இருக்க கம்பெனியில் வேலை பார்க்கும் உழைப்பாளிகளுக்கு வேலை பார்ப்பதில் கஷ்டங்களும், கடின உழைப்பும் ஏற்படும்.    9 ஆம் வீட்டில் சனி இருக்க வெளிநாட்டுக்கு கம்பெனிகளுடன் அதிக ஆதாயம் தரும். 12 ஆம் வீட்டில் சனி இருக்க அரசாங்கத் துறைகளை சமாளிப்பதே ஒரு சவாலாக இருக்கும். தொழில் சிறக்க கிரகங்களுக்கு இடையே ஆன ஸகோயர், ட்ரைன் மற்றும் செக்ஸ்டைல் பார்வைகள் இருப்பது நல்லது. ஒரே வீட்டில் 4 கிரகங்கள் இருப்பதும் சிறப்பு. இதனால் அந்த வீட்டின் செயல்பாடுகள், நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கான மேலதிக சக்தியை அளிக்கிறது. இந்த நிலையில் சூரியன் இருப்பது மிகவும் உபயோககரமானது ஆகும். சந்திரன் இருப்பது மக்கள் தொடர்புடைய தொழில்/வியாபாரத்திற்குச் சிறந்தது. சந்திரன் – குருவுடன் ட்ரைன் மற்றும் செக்ஸ்டைல் பார்வையில் இருப்பது தொழில்/வியாபாரம் செய்பவர்களை தொழிலில் மேலும் அதிக உயரத்திற்குக் கொண்டு செல்லும். கண்டுபிடிப்பாளர்களுக்கு சில பிரச்சனைகளை சமாளிக்க வேண்டிய நிலை ஏற்படலாம். அல்லது தொழிலில் ஆர்வம் குறையலாம். சில நேரங்களில் புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் சனி-குரு கூடி ஒத்துழைப்பு நல்காது.

       கிரகங்கள் கீழ்கண்ட பாவங்களில் மிக மகிழ்ச்சிகரமான மனநிலையோடு இருக்கின்றன.

       12 இல் சனியும், 11 இல் குருவும், 9 இல் சூரியனும், 6 இல் செவ்வாயும். 5 இல் சுக்கிரனும், 3 இல் சந்திரனும் மற்றும் புதன் இலக்னத்திலுமாக சந்தோஷமான நிலையில் லயித்துவிடுகின்றன.

       சனி-சூரியன், சனி-சுக்கிரன், சனி- குரு தொடர்பு பங்குச்சந்தைக்கு சிறந்ததாகும். கோசார குருவின் தொடர்பு பிற கிரகங்களுக்கு கிடைக்கும் போது இது மேலும் சிறக்கிறது.  இவற்றின் இணைவுகள், ட்ரைன் மற்றும் செக்ஸ்டைல் பார்வைகள் நேர்மறையான நிலைகள் ஆகும். இவை அபரிமிதமான அதிர்ஷ்டத்தை அள்ளி வழங்குகின்றன. உதாரணமாக  குரு – சனியின் இணைவு  வங்கித் தொழிலில் மற்ற வங்கி நிறுவனங்களின் ஒன்றிணைப்பு, சேர்க்கைகள் மூலமாக அவற்றை பிரம்மாண்டமான நிலைக்குக் கொண்டு செல்கின்றன.

       நேர்மறையான நிலைகள் தரும் தாக்கங்கள்- தனம், புகழ், திடநம்பிக்கை, நீதியை நிலைநாட்டும் தன்மை, சீர்தூக்கிப் பார்க்கும் தன்மை, வெகுஜன தொடர்பில் வெற்றி, எதையும் சுலபமாகப் புரிந்து கொள்ளும் தன்மை, நேர்மை, மற்றவர்களுக்கு உதவும் குணம், பிரபலமாதல் ஆகியவை ஆகும். அதுவே, ஸகொயர் மற்றும் அப்பொஸிஷன் பார்வைகள் எதிர்மறையான பலன்களைத் தருகின்றன. 
       பொதுவாக  நடுத்தர வயது உள்ளவர்களுக்கே குருவின் தாக்கம் அதிகமாக ஏற்படுகிறது. விளையாட்டு வீரர்கள், புத்தக வெளியீட்டாளர்கள், மருத்துவர்கள், வக்கீல்கள், வங்கி அதிகாரிகள், மதத் தலைவர்கள் போன்றவர்களுக்கு குருவின் தாக்கம் அதிகமாக ஏற்படுகிறது.

       எதிர்மறையான நிலைகள் தரும் தாக்கங்கள்- விரிவாக்கம் செய்யும் போதும், வரவுக்கு மிஞ்சிய செலவுகளையும், துரதிர்ஷ்டத்தையும், சரியான முடிவெடுக்க முடியாத நிலையையும், பொருளாதார, வியாபார நஷ்டங்களையும், பிறர் தவறாக உண்ணும் நிலையையும், பொறுமையின்மையையும், பங்குச்சந்தை இழப்புகளும், சூதாட்ட ஈடுபாடும், வழக்கு விவகாரங்களில் தோல்வியும், மனம் அழுத்தம் காரணமாக ஆரோக்கியக் குறைவும், அதிகமான இரக்க குணத்தால் இழப்புகளையும், புகழ் இன்மையும் குறிகாட்டுகின்றன.