Search This Blog

Monday 10 February 2014

இராமபிரான்




ஶ்ரீ ராகவேந்ராய நமஹ
    கோசலைராமன், தசரதராமன், சீத்தாராமன், அயோத்திராமன் நமது     ஶ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் ஜாதகத்தில் 5 கிரகங்கள் உச்சநிலை பெற்று, ஒரு இராஜயோக ஜாதகத்திற்கு உதாரணமாக பன்னெடுங்காலமாகத் திகழ்கிறது.
    ஆனால், உண்மையில் நடந்தது என்ன ? இந்த கிரகங்கள் ஶ்ரீ இராமபிரானின் வாழ்க்கையில், அவருக்கு அளித்ததென்னவோ துன்பங்களும், பின்னடைவுந்தானே ? இனி எந்த கிரக அமைப்பு, எங்ஙனம் அவருக்கு இன்னல்களைத் தந்தது என்பதைப் பார்ப்போமா ?
    கடக லக்னத்தில் உச்சமான குரு, அவருக்கு மிகவும் சக்திமிக்க, இராட்சதர்களின் எதிர்ப்பினைக் கொடுத்தது. இளமையிலேயே  தனது குரு விஸ்வாமித்ரரோடு கானகம் சென்று, அவரின் யாகசாலைகளை காக்க முற்பட்ட போது மாரீசி போன்ற அரக்க குலத்தவரை எதிர்த்துப் போராடி அழிக்க வேண்டியதாயிற்று. அது தவிர, மாரீசன், ஹரா, துர்சாஸனா மற்றும் மிகப் பெரிய, வீரம் மிக்க படைவீர்ர்களைக் கொண்ட இராவண சேனையையும், எதிர் கொண்டு போராட வேண்டியதாயிற்று.
    இதே, உச்ச குரு, இலக்னாதிபதியான சந்திரனுடன் இணைந்ததால், பாசம் மிக்க, பிரபுத்துவம் மிக்க மற்றும் அவரை உயிருக்குயிராய் நேசித்த தந்தை தசரதனைத் தந்தது, பாக்கிய ஸ்தானாதிபதி குரு இலக்னத்தில் இருப்பது இராமருக்கு தர்மம் தவறாத நிலையையும், எதையும் எது சரி ? எது தவறு ? – என சீர்தூக்கிப் பார்க்கும் புத்திசாலித்தனத்தையும் தந்ததோடல்லாமல், மிகவும் துக்ககரமான சூழலில், அவர் தந்தையைவிட்டுப் பிரியும் நிலையும் ஏற்பட்டது.
    சுக்கிரனின் மூலதிரிகோண வீடான துலாம், 4 ஆம் இடமாகி, அங்கு உச்சம் பெறும் சனி, இராமபிரானெனும் ஈடுஇணையற்ற, மஹாபுருஷனுக்கு மிகவும் பொருத்தமான, அழகான, எவருடனும் ஒப்புநோக்க முடியாத ஜனக மஹாராஜனால், அவனது பிரம்மாண்டமான அரண்மணையில் வளர்க்கப்பட்ட, அழகு தெய்வம், சீதாப்பிராட்டியை பட்டத்துராணியாகக் கொண்டுவந்தது.
    ஆனால், சுகஸ்தானமும், மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு உரிய இடமான 4 ஆம் இடத்தில், அமர்ந்த, 8 ஆம் அதிபதியும், அசுபருமான சனி, அவரை ஒருபோதும், குடும்ப சுகத்தை அனுபவிக்க, அனுமதிக்கவில்லை என்பதுதானே உண்மை ? ஏனெனில், பல காலம், பத்தினித் தெய்வம் சீதா பகைவர்களின் இருப்பிடமான, அரக்கர்கள் நிறைந்த அடர்ந்த வனாந்திரத்தில், தனது தனிமை வாழ்க்கையைக் கழிக்க வேண்டியதாயிற்று.
    இராவண வதத்திற்குப் பிறகு, இராமன், சில காலமே தனது மணவாழ்வின் மகிழ்ச்சியை, அனைத்து சுகங்களை, அமைதியாகக் கொண்டாடிய போது, கொடுமையான விதியின் விளையாட்டால், மீண்டும் தன் மனையாளைப் பிரிய வேண்டியதாயிற்று.
    முதல் முறை, இராமனைவிட்டு, இராவணனால் பிரிக்கப்பட்ட சீதை, இரண்டாவது முறையாக, அவமானத்தின் நிழல் கூட இராஜவம்சத்தின் மீது விழக்கூடாது என்ற நல்லெண்ணத்திலும், அரச தர்மத்தைக் காக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் இராமனே, அவளைக் கானகத்திற்கு அனுப்பிவைத்தான். இதன் மூலமாகவே, இராமனின் அரச கடமை தவறாத மற்றும் மக்களின் எண்ணங்களுக்கும், கருத்துக்களுக்கும் மதிப்பளிக்கிற தலையாய குணமும் இங்கு நிலைநாட்டப்பட்டது.
    இதேபோன்று, 5 மற்றும் 10 ஆம் அதிபதியான செவ்வாய். திருமணத்தைக் குறிக்கும் 7 ஆம் பாவத்தில் அமர்ந்தது, தனது செயலில் வெற்றிகண்டு, இந்த ஆதர்ச தம்பதிகளைப் பிரித்ததின் மூலமாகவும், அவர்களின் காதல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்ததின் மூலமாகவும், தான் ஒரு  ‘ பிரிவினைக் கிரகம்’  என்ற பெயரை ஆணித்தரமாக நிலைநாட்டிக் கொண்டது,
    கடைசியாக, சீத்தாபிராட்டியை, இராமபிரான் வால்மீகியின் ஆசிரமத்தில் சந்தித்தபோது, சீதாதேவி மிகவும் பொறுமையிழந்து, ஜனக மஹாராஜன், எந்த இடத்தில் அவளை முதன் முதலாகக் கண்டெடுத்து, பாராட்டிச் சீராட்டி வளர்த்தானோ, அந்த பூமியிலேயே, பூமாதேவியின் மடியிலேயே, தன் மானுட வாழ்க்கையைத் துறந்து, மண்ணோடு மண்ணாக பூமாதேவியுடன் சங்கமித்தாள்என்பதுதானே கதை.
    மேலும், 5 ஆம் அதிபதி செவ்வாய், இராமன் தனது இரட்டைக் குழந்தைகளான, லவ குசா இருவரையும், அவர்களின் வாலிபக் காலம்வரைகாணவும் அனுமதிக்கவில்லை, அதற்கும் ஆப்புவைத்தான் அங்காரகன். அதன் காரணமாக, அன்புத்தாயைப் பிரிந்த நிலையில், அவர்கள் இருவரையும் அயோத்திக்கு அழைத்து வரும் நிலை ஏற்பட்டது.
    மரியாதை புருஷனான இராம்பிரானின், புகழுக்குப் பங்கம் ஏற்படா வண்ணம், இராஜக் கிரகமான, பத்தாமிடத்தில் உச்சம் பெற்ற சூரியனால் காக்க முடிந்தது.
    ஶ்ரீ இராமபிரானின் ஜாதகத்தில், அநேக இராஜயோகங்கள் தென்படுவது போல், சில அரிஷ்ட யோகங்களும் உள்ளன.
    கேந்திர ஸ்தானத்தில் அசுபர் நிலைபெற்றது, சர்ப்ப யோகத்தைத் தந்தது.
    இலக்னாதிபதி சந்திரன், சனியால் பார்க்கப்படுவது ப்ரவராஜ்ய யோகத்தைத் தந்தது. இந்த நிலை அலைந்து திரியும் யோகத்தைத் தந்தது.
    எனவே, நண்பர்களே! ஆனானப்பட்ட பகவான் இராமனையே விட்டுவைக்காத கிரகங்கள், நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களின் வாழ்க்கையை மட்டும்  விட்டு வைக்குமா ? அவை தரும் கஷ்டங்களை எவராயினும் அனுபவித்துத்தானே ஆகவேண்டும். ? எனவே, கிரகங்கள்கடவுளோ, பக்தனோஅரசனோ, ஆண்டியோ  அல்லது மகத்தானவரோ, சாதாரணமானவரோ எவரையும் வேறுபடுத்திப் பார்க்காமல் இன்ப, துன்பங்களை அளிக்கிறதேயன்றி, ஓரவஞ்சனை செய்வதில்லை. இதை உணர்ந்து இன்பமாக வாழ்வோமாக !
     வாழ்க பாரதம், வாழிய பாரத மணித் திருநாடு ! வந்தேமாதரம்!

n  ஜோதிட கலாநிதி .எஸ். விஜயநரசிம்மன். எம். எஸ்ஸி ( அஸ்ட்ராலஜி )






No comments:

Post a Comment