Search This Blog

Friday 4 May 2018

களத்திர பாவமும், தசா கால பலன்களும்






களத்திர பாவமும், தசா கால பலன்களும்


         நல்ல நிலையில் இருகுகும் 7 ஆம் அதிபதி அதிபதியின் தசா- புத்தி காலத்தில் ஜாதகருக்கு மனைவியின் அருகாமையும், நெருக்கமான உறவில் மகிழ்ச்சியும் நிரம்பி வழியும். வண்ணமயமான வாழ்க்கையும், ஆடை, அணிகலன்களும், உயர்வகை ஆசனங்களும், படுக்கை வசதிகளும் சேரும். இனிய சுற்றுலாப் பயணங்கள், தேன்னிலவு, வெளிநாட்டுப் பயணங்கள் என மனைவியுடனான பொழுது இனிதே கழியும். இக்காலத்தில் திருமணம், சுபகாரியங்கள், விழாக்கள் போன்றவற்றில் கலந்து கொண்டு இன்புறும் வாய்ப்புகள் ஏற்படும்.
          அதுவே, பாதிப்பு அடைந்த, பலமிழந்த 7 ஆம் அதிபதியின் திசையில், ஜாதகருக்குப் பிரிவினை, ஒற்றுமையின்மை போன்ற கஷ்டங்கள் ஏற்படும். மாப்பிள்ளைக்கும் இடையூறுமிக்க காலமாக, கஷ்டகாலமாக அமையும். ஜாதகர் இழிவான பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளுதல், குறிகோளற்று அலைதல் போன்றவற்றாலும், மர்ம உறுப்புகளில் வியாதி ஏற்படுதல் போன்றவற்றாலும், கஷ்டங்களுக்கும், இடையூறுகளுக்கும் ஆளாவார்.
          7 ஆம் அதிபதி, இலக்னாதிபதியுடன் இணைந்து நல்ல நிலையில் 7 ஆம் இடத்தில் இருக்கவும் வெளிநாட்டுப் பயணங்கள் அதிர்ஷ்டங்களை அள்ளித் தரும். அங்கேயே ஜாதகர் வாழ்க்கையில் முன்னேற்றம் கண்டு, சுகமாக வாழ்வார். ஜாதகர் ஓர் அதிர்ஷ்டம் மிக்க, மிகவும் உதவிகரமான பெண்ணை மணந்து கொள்வார்.       7 ஆம் அதிபதி சுபரோடு இருக்க ஜாதகர் உல்லாசக் கப்பலில் பயணமும் செய்வார் அல்லது கப்பலில் கேப்டனாகப் பணிபுரிவார். பலமிழந்த 7 ஆம் அதிபதி ஜாதகரை பிச்சை எடுக்க வைத்துவிடுவார். இலக்னாதிபதியும் பலமிழந்து காணப்பட்டால் 7 ஆம் அதிபதியின் திசை மாரகம் தரலாம். இலக்னாதிபதி நவாம்ச இலக்னத்தில் இருந்து 6, 8, 12 ஆம் இடங்களில்  இருக்க இலாபகரமற்ற, அலைச்சல், கஷ்டம் மிக்கப் பயணங்களை ஜாதகர் மேற்கொள்ள நேரும்.
          7 ஆம் அதிபதி, 2 ஆம் அதிபதியோடு இணைந்து 2 இல் இருக்க அவரின் திசை, ஜாதகருக்கு மனைவி மூலமான பணவரவுகளையும், சொத்துக்களையும் கொடுக்கும் அல்லது பணிபுரியும் பெண்ணுடன் இனிதே திருமணம் நடக்கும். கூட்டு வியாபாரமோ அல்லது இருக்கும் இடத்தை விட்டு வெகு தூரத்திலுள்ள ஏஜன்சிகள் மூலமாகவோ ஜாதகருக்கு சம்பாத்தியம் ஏற்படலாம். பாதிக்கப்பட்டால் இந்த திசையில் ஜாதகருக்கோ, அல்லது அவரின் மனைவிக்கோ மாரகம் நிகழலாம். ஆனால், ஜாதகருக்கு ஆயுள் பலமாக இருந்தால், 2, 7 ஆம் இடங்கள் மாரக ஸ்தானங்கள் ஆவதால் ஜாதகர் தன் மனைவியைப் பிரிந்து வாழ்தலோ அல்லது மனக் கஷ்டங்களோ, குழப்பங்களோ ஏற்படலாம். 7 ஆம் அதிபதி நவாம்ச இலக்னத்தில் இருந்து 8 ஆம் வீட்டில் இருந்தால், மனைவி இறக்கமாட்டாள், ஆனால், ஜாதகர் வெகுதூரத்தில் வேறு ஒருத்தியை இரண்டாவதாக மணம் முடிப்பார்.
           7 ஆம் அதிபதி, 3 ஆம் அதிபதியோடு இணைந்து 3 இல் இருக்க மனைவி உயர்குடிப் பிறப்பாக இருப்பாள். மாமனார் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பார். மூன்றாம் அதிபதியின் புத்திக் காலத்தில் சகோதரன் அல்லது சகோதரிக்கு கண்டமோ, மாரகமோ ஏற்படலாம். அப்போது இரண்டாம் திருமணமும் ஏற்படலாம். அசுப தாக்கம் இல்லையெனில் அஞ்ச வேண்டாம், பாதிப்பு குறைவாகவே இருக்கும்.
          7 ஆம் அதிபதி, 4 ஆம் அதிபதியோடு இணைந்து 4 இல்  நல்ல நிலையில் இருக்க ஜாதகர் அதிக பயணங்களை மேற்கொள்வார். ஜாதகர் வாழ்க்கையில் சுக போகங்கள் நிலைப்பதோடு, நிச்சியதார்த்தம், திருமணம் போன்ற நற்காரியங்கள் ஏற்படும்.  பாதிப்பு அடைந்த நிலையில் இருந்தால் ஜாதகரின் தாயாருக்கு மரணம் நிகழலாம் அல்லது கண்டம் ஏற்படலாம். அவரது கல்வி நிலைக்கு உரிய சம்பாத்தியம் ஏற்படலாம் அதுவும் அநேகமாக அயல்நாட்டில் ஏற்படலாம். 4 ஆம் அதிபதி திசையில் ஜாதகர் கார் போன்ற வண்டி வாகனங்கள் வாங்குவார்.
           7 ஆம் அதிபதி, 5 ஆம் அதிபதியோடு இணைந்து 5 இல் நல்ல நிலையில் இருக்க, மனைவி, மக்கள் சந்தோஷமாகவும், செல்வ நிலையில் விருத்தியுடனும் திகழ்வர்.  பாதிப்பு அடைந்திருந்தால் குழந்தைகளுக்கு ஏதேனும் அபாயம் நிகழலாம் அல்லது மாரகத்தை சந்திக்கலாம். மணவாழ்க்கை பாதிப்போ அல்லது மனைவியின் பிரிவோ, இறப்போ ஏற்படலாம். இது முக்கியமாக எப்போது ஏற்படுமெனில், நவாம்ச இலக்னத்துக்கு 6, 8, 12 இல் 7 ஆம் அதிபதி இருக்கும் காலத்திலே ஏற்படும். நவாம்ச இலக்னத்திற்கு 6 இல் 5 ஆம் அதிபதி இருக்க நோய் காரணமாக குழந்தைகள் மருத்துவ மனையில் சேர்க்கப்படலாம். 12 இல் இருக்க திருடர்களாலோ, எதிரிகளாலோ ஜாதகரின் குழந்தைகளுக்குத் துன்பங்கள் ஏற்படலாம். 7 ஆம் அதிபதி, 5 ஆம் அதிபதியோடு இணைந்து 5 இல் மிக்க பாதிப்புடன் இருக்க குழந்தைகள் கொல்லப்படலாம்.
             7 ஆம் அதிபதி, 6 ஆம் அதிபதியோடு இணைந்து 6 இல் இருக்கும் நிலை மிகவும் மோசமான நிலையாகும். இதன் காரணமாக மனைவிக்கு அவமானங்களோ அல்லது நீண்ட கால நோய்களோ ஏற்படலாம். ஜாதகரின் தாய் மாமனுக்குக் கண்டமோ மரணமோ ஏற்படலாம். ஏனெனில் 7 ஆம் வீடு மாரக ஸ்தானமன்றோ ? கடன் தொல்லைகள், வழக்கு விவகாரங்கள் ஆகியவையும் ஏற்படலாம். ஜாதகருக்கு ஒரு பெருந்தொகை இழப்பு ஏற்படலாம். சுபகோள் இணைவு இருக்க ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே தற்காலிகமாக இத் துன்பங்கள், துயரங்கள் இருக்கும். பாதிப்புகளும் ஓரளவு குறையும்.
        7 ஆம் அதிபதி, சுபரோடு இணைந்து 7 இல் நல்ல நிலையில் இருக்க அத்திசை, புத்தி சிறப்பானதாக இருக்கும். ஜாதகரின் வாழ்க்கை கொண்டாட்டங்கள், கும்மாளங்கள் என மகிழ்ச்சி நிறைந்ததாகவே இருக்கும். காலாகாலத்தில் திருமணம் நடக்கும். சமூகப் பின்பலத்துடன் கூடிய அழகிய மனைவி அமைவாள். இக்காலத்தில் வெளிநாடு செல்வதின் மூலமாக ஜாதகர் அபரிமிதமான செல்வங்களைச் சேர்ப்பார். மதிப்பு மிக்க பல பெரிய மனிதர்களின் தொடர்பு ஏற்படும். அவர்களின் தொடர்பு ஜாதகரின் முன்னேற்றத்துக்கு மிகவும் சாதகமாக அமையும்.. பாதிப்பு அடைந்தால் ஜாதகர் நோய்வாய்ப்படுவார் அல்லது ஏதேனும் பிரச்சனைகளில் மாட்டிக் கொள்வார்.-
         7 அம் அதிபதி 8 இல் இருக்கும் போது திசை நடந்தால் மோசமான பலன்களைத் தருவார். ஜாதகரின் துணைக்கு உடல் உபாதைகள் ஏற்படலாம் அல்லது மரணமும் ஏற்படலாம். ஆயின் அவருக்கு வெளிநாடு செல்லும் பாக்கியம் ஏற்படலாம். ஆனால், அதன் மூலமாகவே அவருக்குப் பல இன்னல்களும், பிரச்சனைகளும் எழலாம். விபத்தைக்கூட சந்திக்க நேரலாம்.
       களத்திர பாவாதிபதி, பாக்கியாதிபதியுடன் இணைந்து பாக்கியத்தில் நல்ல நிலையில் அமர்ந்தால், இந்த தசாக் காலத்தில் திருமணத்தின் மூலமாக அதிர்ஷ்டம் ஏற்படும். ஜாதகர் புண்ணிய ஸ்தல யாத்திரைகள் மேற்கொள்வார். தரும வழிகளில் அதிகம் பணங்களைச் செலவழிப்பார். இரக்ககுணமும், பிறருக்கு உதவுகின்ற மனநிலையும் அதிகரிக்கும். நேர்மையின் காரணமாகவே அவருக்குப் பல அதிர்ஷ்ட நிலைகள் உருவாகும். அதன் காரணமாக அவருக்கு சொத்துக்கள் பல சேரும். அனைத்து சுக சௌகரியங்களையும் அனுபவிப்பார். இவரது மனைவியும் நற்குணவதியாக அமைந்து, இவரையும் நியாயமான, நேர்மையான, சரியான பாதைக்கு அழைத்துச் செல்வாள். இவரது வேலைகள் வெளிநாட்டில் நல்ல முன்னேற்றகரமாக அமையும். புகழும் கௌரவமும் அதிகரிக்கும். ஆயின், பாக்கியத்தில் உள்ள 7 ஆம் அதிபதி பாதிப்பு அடைந்தால், மனைவியானவள் இவரை நேர்மையற்ற தவறான வழிகளில் இட்டுச் சென்று, கடமை தவறச் செய்வார். இதன் காரணமாக, தீய எண்ணங்களும், பிறர் மீது வெறுப்பும் ஏற்படுவதோடு, கொடுரமான செயல்களிலும் ஜாதகர் ஈடுபடுவார். 7 ஆம் அதிபதி நவாம்சத்தில் 6, 8, 12 ஆம் இடங்களில் இடம்பெற்றால் இத்தீய குணங்கள் மேலும் அதிகரிக்கும்.
        பலம் மிக்க 7 ஆம் அதிபதி, கர்ம பாவாதிபதியுடன் கர்ம பாவத்தில் இணைந்தால் ஜாதகருக்கு வெளிநாட்டில் நல்ல புகழும் கௌரவமும் ஏற்படும். அவரது நல்ல குணத்துக்கும், தர்ம சிந்தனைக்கும் அனைவராலும் அறியப்பட்டு, அதிகமாகப் போற்றவும்படுவார். 7 ஆம் அதிபதியின் தசா காலத்தில் ஜாதகரின் தொழில் வளம் பெருகுவதோடு, அவரது தொழிலில் பெருமையும் புகழும் அடைவார். அவரது மனைவியும் மதிப்பு மிக்கவராகவும், பெருமைக்கு உடையவராகவும் மதிக்கப்படுவார். கர்மாதிபதி பலமற்று இருந்தால் இந்நிலைகளுக்கு எதிர்மாறான நிலையே ஏற்படும். 
        இலாபாதிபதி பலமுடன் இருந்தால், வர்த்தகத்தில் சிறப்பு நிலை அடைவார். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கும் இலாபமும் முன்னேற்றமும் இருக்கும். தொழிலில் வியக்கத்தக்க விரிவாக்கங்களும், வெளிநாடுகளில் கிளை பரப்பும் அளவுக்கு முன்னேற்றங்களும் இருக்கும். இலாபாதிபதி பாதிப்பு அடைந்தால் மூத்த சகோதரனுக்கு இழப்புகள் ஏற்படும். 7 ஆம் அதிபதிக்கு சுப அசுபத் தாக்கங்கள்  இருப்பின் தொழில், வியாபாரத்தில் ஓரளவு இலாபங்கள் இருக்கும்.
        7 ஆம் அதிபதி 12 இல் இருக்க, பாவ காரகரும் பலமிழந்து காணப்பட, மகிழ்ச்சியற்ற மண வாழ்க்கை அமைவதோடு, பிரிவு அல்லது மரணம் காரணமாக பிரிவினை ஏற்படும். களத்திர காரகனும், களத்திர பாவாதிபதியும் பலம் மிக்கவராக இருப்பின் மனைவி பல காலம் வாழ்வார். ஜாதகர் வெளிநாடு செல்லலாம் ஆனால் அங்கு நிம்மதி இருக்காது. பல வகைகளிலும் துன்பத்தை அனுபவிப்பார்.
        இலக்னாதிபதி, களத்திர பாவாதிபதி, விரயாதிபதி ஆகியோர் விரய பாவத்தில் இடம்பெற, இவற்றில் ஏதேனும் ஒரு தசா காலத்தில், கணவனும் மனைவியும் வெளிநாட்டில் குடியிருப்பர். முக்கியமாக 7 ஆம் அதிபதியின் திசையில் வாழ்வர். இந்த இணைவு அசுப பாதிப்புடன் இருப்பின், ஜாதகர் தன் மனைவியுடன் இணைந்து தீய நடவடிக்கைகளில் ஈடுபடுவார்.  சுப தாக்கம் இருப்பின் இக் காலத்தில் ஜாதகர் தீவிர ஆன்மிக வழிகளில் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்.

No comments:

Post a Comment