Search This Blog

Sunday 23 June 2019





பன்னிரு இராசிகளில் சூரியனின் தாக்கம்.


விருச்சிக இராசியில் சூரியன்

         விருச்சிக இராசியில் உள்ள சூரியன் ஜாதகரை மனதளவில் அதிக பலம் மிக்கவராகவும், எதிலும் தோல்வி காணாத அளவுக்கு அதீத சக்தி உடையவராகவும் ஆக்கிவிடுகிறது. எதையும் அறியும் ஆர்வம் மிக்கவராகவும், உறுதி கொண்டவராகவும், எதற்கும் பின் வாங்காதவராகவும், நெஞ்சுரம் கொண்டவராகவும் இருப்பார். மறைபொருள் காண்பதில் ஆர்வம் உள்ளவராகவும், நியாயத்திற்குப் புறம்பாக நடக்காதவராகவும் இருப்பார். ஆய்வுத் திறன் மிக்கவராகவும், கூர்மதி உடையராகவும், குரங்குப் பிடிபோல் விடாப்பிடியாக இருப்பவரும், பிடிவாதம் மிக்கவராகவும், கொள்கைப் பிடிப்பு உடையவராகவும் விளங்குவார். சிக்கன மானவரும், பிரச்சனைகளுக்கு உரியவராகவும், சந்தேக குணம், பிடிவாத குணம், வளைந்து கொடுக்காத, அடம் பிடிக்கிற, மூர்க்கத்தனமான குணங்களை உடையவராகவும் இருப்பார். மனம் திறந்த. வெளிப்படையானவராகவும் இருப்பார். பிறரைக் கேலி செய்பவராகவும், வசைபாடுகிறவராகவும், நோய், விபத்துக்களையும், உறவுகளின், நண்பர்களின் மரணத்தை சந்திக்கக் கூடியவராகவும் இருப்பார். எதிர்ப்பு குணமும், போராட்ட குணமும், நாட்டில் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டு வரும் ஆளுமை உணர்வு உள்ளவராகவும் இருப்பார். இதனால் ஈடுபடும் காரியங்கள் எதிலும் வெற்றி கொள்பவராகவும், தைரியசாலியாகவும் இருப்பார்.
         அதுவே, பலம் குறைந்த, பாதிப்படைந்த சூரியனாகில் – காமவுணர்வு மிக்கவராகவும், பொறாமை உடையவராகவும், முரட்டு குணம் உடையவராகவும், பொதுமக்களிடையே செல்வாக்கு இல்லாதவராகவும், ஏற்ற, இறக்கம் உள்ள வாழ்க்கையை உடையவராகவும் இருப்பார். அரசு உயர் அதிகாரிகளின் அனுகூலம் இருக்காது. அரசாங்கத்தால் இழப்புகள் இருக்கும். பொறுப்புள்ள பதவிகளை ஏற்றாலும் அதில் வெற்றி பெறுவது அரிது.
         குறிகாட்டப்படும் நோய்கள் – பொதுவான உறுப்புகள், சிறுநீரக பாதிப்பு, கல்லடைப்பு, மேகநோய், குடல் வால் அழற்சி,  இதய படபடப்பு, கீல் வாதம் ஆகியவற்றைக் குறிகாட்டுகின்றன. 

தனுசு இராசியில் சூரியன்.

         சூரியன் தனுசு இராசியில் இருக்க ஜாதகர் களிப்புடைய, மகிழ்ச்சி நிறைந்தவராகவும், ஒளிமயமானவராகவும், நம்பிக்கையுடையவராகவும், இரக்க குணம் உடையவராகவும், தர்மம் செய்பவராகவும் விளங்குவார். நீதிமான், மத ஆர்வம் உடையவர், கடமை தவறாதவர், உள்ளுணர்வு உடையவர், ஞான சூட்சுமம் உடையவர். தன்னம்மிக்கை உடையவர். சுறுசுறுப்பானவர், அசலான வேலைகளைச் செய்பவர், உண்மையானவர், கண்டுபிடிப்பாளர், புதிய பொருள்களை உருவாக்குபவர். சுயவுரிமை, சுதந்திரம் ஆகியவற்றை விரும்புபவர். பிறர் தயவோ, உதவியோ இன்றி தானகவே, தனியாகவே வேலைகளைச் செய்ய விரும்புவார். இவரது எண்ணங்கள் நேர்மையானதாகவும், தீர்மானமானதாகவும் இருக்கும். குழந்தைகள் பிறப்புக்கும், ஆரோக்கியத்திற்கும் அனுகூலமாய் செயல்படுவர். பயணங்கள், கடல் பயணங்கள், இடம் அல்லது இருப்பிட மாற்றங்களை விரும்புவர். ஆசிரியர்கள், ஞானிகள், மதத் தலைவர்கள், ஆன்மிக குருமார்கள் ஆகியோருக்கு உரிய மதிப்பையும், மரியாதையையும் அளிப்பவர். எதையும் தாங்கும் இதயத்தோடு, சிறப்பான வாழ்க்கையை வாழ்பவர்.
         சூரியன் பலமற்று, பாதிப்படைந்து இருந்தால் – அசட்டுத் துணிச்சல் உடையவர், செலவாளி, அஜாக்கிரதையானவர், மாற்றங்களை உடையவர், சத்தங்களை விரும்புகிற, வெளிநாட்டுப் பொருள்களை விரும்புகிறவராய் இருப்பார்.
         குறிகாட்டப்படும் நோய்கள் – விபத்தினால் ஏற்படும் காயங்கள், கீழே விழுதல், வெட்டுப்படுதல், முடக்குவாதம், நரம்புத் தளர்ச்சி, கபம், நுரையீரல் சம்பந்தமான நோய்கள், கண்ணில் பாதிப்பு ஆகியவை குறிகாட்டப்படுகின்றன.

மகர இராசியில் சூரியன்
       
         மகர இராசியில் சூரியன் இருக்க – ஜாதகர் அதிக ஆசை உடையவர், இலட்சியவாதி, அதிகாரமும், புகழும் உடையவர். தலைமைப் பொறுப்புக்குத் தகுதியானவர். நன்மைக்கோ அல்லது தீமைக்கோ ஆணையிடுவதிலும், பிறரை வழி நடத்துவதிலும் வல்லவர். சிந்தனையாளர், எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளாதவர், ஆழமான மனதுடையவர், எதையும் சீர்தூக்கிப் பார்த்து செய்யும் கற்பிப்பாளர் ஆவார். செயல் முறை திறன் மிக்கவர். பொருளாதார உணர்வு உடையவர். துப்பறியும் நிபுணர். வாழ்க்கையில் சிறப்பான நிலையடைந்து பிரசித்தி பெற்றவராய் திகழ்வார். அடிக்கடி ஏமாற்றம் அடைந்தாலும் மனம் தளரமாட்டார். இவர் முக்கியப் பொறுப்பேற்று செய்யும் காரியங்களில் பல தடைகளுக்குப்பின் வெற்றியடைவார். தன்னை முன் நிறுத்துபவர். சுயநலவாதி. எதிலும் எச்சரிக்கை உடையவர், சிக்கனமானவர்.
         சூரியன் பாதிப்பு அடைந்திருந்தால் – தனிமை இவருக்கு இனிமை தரும். முகவாட்டம், சிடுசிடுப்பு, மகிழ்ச்சியற்ற தன்மை உடையவர். இவர் வாழ்க்கையில் தடைகளும், தாமதங்களும், ஏற்ற இறக்கங்களும் இருக்கும். இவர் ஈடுபடும் காரியங்களில் பாராட்டப்படாத காரணத்தால் மனத் தளர்ச்சி அடைவார். சளி, மூட்டுவலி, தோல் வியாதி, அஜீரணம், வயிற்றுப்போக்கு ஆகிய உபாதைகள் ஏற்படும்.
         

No comments:

Post a Comment