Search This Blog

Wednesday 25 April 2018




களத்திர பாவம்

       களத்திர பாவம் எனும் 7 ஆம் பாவம் முக்கியமாகத் திருமணம், மனவி அல்லது கணவன் மற்றும் மணவாழ்க்கையின் மகிழ்ச்சி பற்றிய விவரங்களை குறிகாட்டுகிறது.
       திருமணம்வாழ்க்கையின் முக்கிய அடையாளம் மற்றும் குறிப்பிடத்தக்க சம்பவமும் ஆகும். காதல் மற்றும் பாசத்தால் உருவாக்கப்பட்ட ஸ்தாபனமாகும். ஆனால். இது பலதரப்பட்ட உள்ளுணர்வு மிக்க மற்றும் மனம், எண்ணம்,                உணர்ச்சிகளால் ஆன  சிக்கலான காரணிகளால் உருவாக்கப்பட்ட அமைப்பு ஆகும். ஆயினும், நமக்குத் திருமணம் பற்றிய ஜோதிடத் தகவல்கள் மட்டுமே தேவை என்பதால்  சமூகம் மற்றும் சட்டம் தொடர்பான காரணிகளை ஒதுக்கிவிட்டுப் பாரப்போம்.
       திருமணம்பகுத்தறிவில்லாத, முரட்டுதனமான உணர்வுகளுக்குரிய ஸ்தாபனம் அல்ல. மேலும், அது இருவரை மட்டும் பாதிக்கக்கூடிய ஒரு சமுதாய ஒப்பந்தம் அல்ல. அதுவே சமூக அக்கறையுடன் கூடிய குடும்ப உறவுகளுக்குள்ளான அடிப்படை அமைப்பு ஆகும். இந்த அமைப்பின் மூலமாகவே நல்ல எதிர்கால சந்ததிகள் உருவாக்கப்படுகின்றனர். நம் நாட்டில் திருமணம் என்பது - தர்ம, அர்த்த, காம, மோட்சம் ஆகியவற்றை சமமாகப் பேணக் கூடிய இரு மனங்கள் இணையக்கூடிய  புனிதச் சடங்காகக் கருதப்படுகிறது.
       ஏழாம் பாவத்தை ஆய்வு செய்யும் போது மூன்று முக்கியமான காரணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.  அவை 1). 7 ஆம் பாவம் 2). . 7 ஆம் அதிபதி 3). களத்திர காரகன் (சுக்கிரன்) ஆகியவை ஆகும். இவை தவிர 7 ஆம் வீட்டில் உள்ள கிரகங்கள் மற்றும்  7 ஆம் அதிபதியோடு இணைந்துள்ள கிரகங்கள் ஆகியவற்றை பற்றிய நிலைகளும் கருத்தில் கொள்ளப்படலாம்.
வெவ்வேறு பாவங்களில் 7 ஆம் அதிபதி நிற்கும் பலன்கள்.
7 ஆம் அதிபதி இலக்னத்தில் இடம் பெற்ற ஜாதகர்
         குழந்தைப் பருவம் முதல் நன்கு பழகிய மிகவும் பரிச்சயமான பெண்ணை மணப்பார் அல்லது ஒரே வீட்டில் வளர்க்கப்பட்ட பெண்ணாகவும் இருக்கலாம். இந்த ஜாதகரின் கணவனோ மனைவியோ நிலையான மனமுடையவராகவும், அறிவு முதிர்ந்த மனிதராகவும் இருப்பார். மிக்க அறிவாளியாகவும், எந்த ஒரு செயலில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், சாதக பாதகங்களை முழுவதுமாக அறிந்தவராகவும் இருப்பார். பாதிப்படைந்த 7 ஆம் அதிபதி அடிக்கடி பயணங்களை ஏற்படுத்துவார். 7 ஆம் அதிபதி மற்றும்  களத்திரகாரகன் சுக்கிரன் பாதிப்பு அடைய ஜாதகர் உணர்ச்சி மிக்கவராகவும், எதிர்பாலரிடம் இரகசிய உறவு கொள்ள விழைபவராகவும் இருப்பார்.
7 ஆம் அதிபதி இரண்டில் இடம் பெற்ற ஜாதகர்
         திருமணத்தின் மூலமோ பெண்களாலோ செல்வ நிலை உயரும். பாதிப்படைந்தால் முறையற்ற வழிகளில் பெண்களை பயன்படுத்தி சம்பாதிப்பார், இதற்கு அவரின் மனைவியும் விதிவிலக்கல்ல. சிரார்த்த வீடுகளில் பரிமாறப்படும் உணவுகளை உட்கொள்வார். அதேபோன்ற உணவினையே தேடிச்செல்வார். 2 ஆம் வீடு உபய இராசியாகி, பாதிப்படைந்தால் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் ஏற்படும். 7 ஆம் அதிபதியின் திசை, மாரக கிரக திசையாக அமைந்தால் அவர் மரணத்தைத் தழுவலாம். நிலையற்ற அலைபாயும் மனதை உடையவராக இருப்பார். எப்போதும் காம உணர்விலேயே இருப்பார்.
 7 ஆம் அதிபதி மூன்றில் இடம் பெற்ற ஜாதகர்
         ஜாதகரின் இளைய சகோதரர் வெளிநாட்டில் வசிக்க கூடிய அதிர்ஷ்டக்காரராக இருப்பார். பாதிப்படைந்தால்ஜாதகர் தனது சகோதரர் அல்லது சகோதரி மணந்துள்ள வாழ்க்கைத் துணையுடன்  முறையற்ற உறவு வைத்திருப்பார். சகோதரருக்கும் துரதிர்ஷ்டம் ஏற்பட்டுவிடுகிறது. அவருக்குப் பிறக்கும் குழந்தைகளில் பெண் குழந்தைகள் மட்டுமே உயிரோடு இருக்கும்.
7 ஆம் அதிபதி நான்கில் இடம் பெற்ற ஜாதகர்
         அனைத்து சுக சௌகரியங்களுடன் கூடிய அதிர்ஷ்டக்கார வாழ்க்கைத் துணையுடனும், அனேகக் குழந்தைகளைப் பெற்றும் சந்தோஷமாக வாழ்வார். ஜாதகர் உயர் பட்டப் படிப்பினை முடித்து அதனால் நல்ல பலன் அடைவதோடு, பல வாகனங்களை உடையவராகவும் திகழ்வார். பாதிப்படைந்தால்,  அறிவு முதிர்ச்சியற்ற, இழிவான குணமுள்ள வாழ்க்கைத் துணையால், மணவாழ்க்கையும் பாதிப்பு அடையும். வாகன விஷயத்திலும் முடிவில்லாத பல கஷ்டங்களையும் அனுபவிப்பார். நிழல் கிரகங்கள் மற்றும் அசுபகிரகங்களால் மேலும் பாதிக்கப்பட்டால் வாழ்க்கைத் துணையின் குணம் கேள்ளிவிக்கு உரியதாக இருக்கும்.
7 ஆம் அதிபதி ஐந்தில் இடம் பெற்ற ஜாதகர்
         இளமையிலேயே திருமணம் ஆகும். வாழ்க்கைத் துணை செல்வ நிலையில் உயர்ந்த, மிக நல்ல குடும்பத்தில் இருந்து அமையும். அறிவு மிக்க முதிர்ச்சி பெற்ற துணையாக அமைவது ஜாதகருக்கு மேலும் சாதகமான நிலையாக இருக்கும். 7 ஆம் அதிபதி பலமற்றவராக இருப்பின் குழந்தைகள் இல்லா நிலை ஏற்படலாம். மிகவும் அதிகமாக அல்லது மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்க்கைத் துணையின் முறையற்ற உறவுகளின் மூலமாக குழந்தை பிறக்கலாம்.   7 ஆம் அதிபதிக்கு நல்ல கிரக தொடர்பும், தீய கிரகத் தொடர்பும் இரண்டுமே ஏற்பட்டால், அவற்றின் தாக்கம் காரணமாக, பெண் குழந்தைகள் மட்டும் பிறக்கும். ஜாதகரின் அலுவலக உயர் அதிகாரிகளுக்கு வெளிநாட்டுத் தொடர்புகள் மூலமாகப் பல இன்னல்கள் ஏற்படலாம். ஜாதகர் நல்ல ஒழுக்கமான குணங்களை உடையவராக இருப்பார்.
7 ஆம் அதிபதி ஆறில் இடம் பெற்ற ஜாதகர் 
         இரண்டு திருமணங்கள் புரிந்து, இருவருடனும் வாழ்வார். மாமன் மகளை மணக்கலாம். அதிபதியும், காரகரும் மோசமாக பாதிப்படைந்து இருந்தால் ஜாதகர் மலட்டுத் தன்மை உடையவரக இருப்பார். மேலும் பல நோய்களும் இருக்கலாம். வாழ்க்கைத் துணை நோயுள்ளவராகவும், பொறாமை குணம் உடையவராகவும், வாழ்க்கைத் துணையை மண வாழ்வில் சந்தோஷமாக வாழவிடாதவராகவும் இருப்பார். காரகன் நல்ல நிலையைப் பெற்று, அதிபதி பலமற்று இருந்தால் ஜாதகர் மூலநோயால் கஷ்டப்படுவார். சுக்கிரன் பாதிப்பு அடையாமால், பலம் குறைந்து காணப்பட்டால், ஜாதகர் அஜாக்கிரதை காரணமாக வாழ்கைத் துணையை தொலைத்துவிடலாம் அல்லது அவளை விட்டு ஓடிவிட நேரலாம். 
7 ஆம் அதிபதி ஏழில் இடம் பெற்ற ஜாதகர்
        பலம் மிக்கவராக இருந்தால் ஜாதகர் காந்த மெனக் கவர்ந்து இழுக்கும் அழகு உடையவராக இருப்பார். பெண்கள் இவரைக் கவர இனிப்பை மொய்க்கும் எறும்பு எனச் சுற்றி தங்கள் விருப்பத்தைத் தெரிவிக்க முயலுவர். கணவனோ அல்லது மனைவியோ கௌரவம் மிக்க, மதிப்பு மிக்க குடும்பத்தில் இருந்து வந்தவராகவும், மரியாதைக்குரிய சமூக அந்தஸ்து உடையவராகவும் இருப்பார். பலமற்ற, பாதிக்கப்பட்ட 7 ஆம் அதிபதி ஆயின், தனிமை நிறைந்த வாழ்க்கையைத் தந்து விடுகிறது. திருமணம் இல்லாத, மற்றும் நண்பர்கள் அற்ற நிலையும், திருமண ஏற்பாடுகளின் போது இழப்புக்கள் ஏற்படும்.
7 ஆம் அதிபதி எட்டில் இடம் பெற்ற ஜாதகர்
        நல்ல நிலையில் இருந்தால் சொந்தத்தில் திருமணம் நடக்கும் அல்லது துணைவர் பெரிய பணக்கார இடத்தில் இருந்து அமைவார். பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தால் துணைவரின்  விரைவான மரணத்திற்குக்கு காரணமாவார் 7 ஆம் அதிபதி. ஜாதகர் தூரதேசத்தில் மரணமடைவார். நோயுற்ற மனைவி, முசுடான குணம் உடையவளாக அமைவாள். கணவன் மணமுறிவுக்கோ அல்லது பிரிவினைக்கோ முயலுவார்.
7 ஆம் அதிபதி ஒன்பதில் இடம் பெற்ற ஜாதகர்
         பலம் மிக்கவராக இருப்பின் ஜாதகரின் தந்தை வெளிநாட்டில் வசிப்பதின் மூலமாக தனது அதிர்ஷ்டத்தை பெருக்கி வாழ்க்கையில் முன்னேற்றம் உடையவராய் இருப்பார். ஜாதகர் நல்ல சரியான வாழ்க்கையை நடத்தக்கூடிய அளவுக்கு தூண்டுதலாக அமையக்கூடிய, அறிவுள்ள, புத்திசாலித்தனம் மிக்க மனைவி அமைவாள். பாதிப்படைந்த 7 ஆம்அதிபதி 9 இல் இருப்பின் ஜாதகரின் தந்தை இளமையிலேயே இறக்கலாம். இவருக்கு அமைந்த மனைவி தர்ம வழியில் நேர்மையான முறையில் இவரை வாழ விடமாட்டாள். இவர் வீண் செலவுகள் செய்து சொத்துக்களை இழந்து வறுமையில் வாழ நேரும்.
7 ஆம் அதிபதி பத்தில் இடம் பெற்ற ஜாதகர்
        அதிபதி நன்நிலையில் இருந்தால், ஜாதகருக்கு வாழ்க்கையில்  வெளிநாட்டுத் தொழில் மூலமாக செல்வ மழை கொட்டும் அல்லது தன் வாழ்க்கையில் தொழில் முன்னேற்றத்துக்காக அடிக்கடி பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். இவருக்கு அமையும் மனைவி அல்லது கணவன் விசுவாசம் மிக்கவராகவும், உண்மையானவராகவும் இருப்பார். இவருடைய வருமானம் கூடும் விதமாக, துணையானவர் வேலைக்குச் செல்பவராக இருப்பார் அல்லது வாழ்க்கையில் முன்னேறும் விதமாக அவருடைய முன்னேற்றங்களுக்குக் கை கொடுப்பவராக இருப்பார். பாதிக்கப்பட்டிருந்தால், வாய்க்கும் களத்திரம் கச்சத்தனம் உள்ளவராகவும், பேராசை மிக்கவராகவும் இருப்பார். ஜாதகரின் தொழில் முன்னேற்றங்கள் பாதிப்பு அடைவதோடு, சீர்கேடு அடையலாம்.
7 ஆம் அதிபதி பதினொன்றில் இடம் பெற்ற ஜாதகர்
         ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் நிகழலாம் அல்லது பல பெண்களுடன் உறவு வைத்திருக்கலாம். சுபநிலையில் இருந்தால், உயர்ந்த நிலையில், பெரிய குடும்பத்தில் வந்தவளாக இருப்பாள் அல்லது அதிக செல்வ வளங்களைக் கொண்டு வருபவளாக இருப்பாள். பாதிப்படைந்த நிலையில் இருந்தால் ஜாதகர் ஒன்றுக்கு மேற்பட்டவரை மணக்கலாம். அதில் ஒருவர் நீண்ட காலம் வாழ்ந்திருப்பார்.
7 ஆம் அதிபதி பன்னிரெண்டில் இடம் பெற்ற ஜாதகர்
        ஒன்றுக்கும் மேற்பட்ட திருமண வாழ்க்கை ஏற்படலாம். முதல் மனைவி உயிருடன் இருக்கும் போதே வேறொருத்தியை அவளுக்குத் தெரியாமல் ரகசியமாக மணக்கலாம். பாதிப்படைந்த நிலையில் முதல் மனைவியைப் பிரிந்த நிலையிலோ அல்லது அவள் இறந்துவிட்ட நிலையிலோ வேறு ஒருத்தியை மணப்பார். ஆனால் இந்த பாதிப்பு அதிகமுள்ள நிலையில் கணவன், மனைவி திருமணம் நடந்த சில காலத்திலேயே பிரிவினையாலோ, இறப்பாலோ பிரிய நேரலாம் ஆனால் மறுமணத்துக்கான வாய்ப்பு இருக்காது. இறப்பானது பயணத்தின் போதோ அல்லது வெளிநாட்டிலோ ஏற்படலாம். காரகரும், 7 ஆம் அதிபதியும் பலம் குறைந்தவராகக் காணப்பட்டாரானால் ஜாதகர் மனைவியின் முகத்தைக் கனவில் மட்டுமே காணமுடியுமே அன்றி திருமணம் அவருக்கு வாய்க்கப் பெறாது. அவருக்கு அமையும் பெண் வேலைக்கார வீட்டுப் பெண்ணாகவும் இருக்கலாம். பொதுவாக அவர்     ஏழையாக இருப்பார். எச்சிற் கையில் காகத்தைக் கூட ஓட்டமாட்டார்.
       மேலே கூறப்பட்ட ஜாதக நிலைகளின் பலன்களை இதில் கூறப்பட்டுள்ளபடி மொட்டையாகப் பயன்படுத்தக் கூடாது. முழு ஜாதக கிரக நிலைகளை அனுசரித்தே பலன் காணப்பட வேண்டும். அத்துடன் கிரகங்களின் பலம் அறிந்து, வலுவான நிலையில் உள்ளதா ? -  என அறிந்த பின்னரே பலன் நிர்ணயிக்கப்பட வேண்டும்.

No comments:

Post a Comment