Search This Blog

Friday 27 September 2019






பாவங்களில் கிரகம் தரும் பலன்கள்

         வெவ்வேறு பாவங்களில் அனைத்து கிரகங்களும் அளிக்கின்ற பலன்களை இருவகையாகப் பிரிக்கலாம். அதாவது அனுகூலமான அல்லது அனுகூலமற்ற பலன்கள் எனப் பிரிக்கலாம்.
         ஒரு கிரகம் அளிக்கும் அனுகூலமான பலன்கள் – பலம் மிக்க கிரகமாக இருப்பின் – அதாவது உச்சநிலை, மூலதிரிகோணம், சொத்த வீடு, இயற்கை நட்பு முறை, சுபரின் தாக்கம் உடைய பாவம், அதாவது குரு, புதன், சுக்கிரன் அல்லது சந்திரனின் தாக்கம் ஆகியவையே பலமிக்க நிலையாகப் பருதப்படுகின்றன.
         பலம் குறைந்த கிரகம் – நீச நிலை மற்றும் எதிரிகள் பாவம். இயற்கை அசுப கிரகங்களானச் சூரியன், செவ்வாய், சனி, இராகு அல்லது கேதுவின் தாக்கம் கொள்வது பலம் குறைந்த நிலையாகும்.
         ஒரு பாவம் இரு அசுபர்களுக்கு இடையே அமைந்தாலோ (பாதிப்பு அடைந்தாலோ) அத்துடன் பாவாதிபதி பலமற்றவராக இருந்தாலோ, அந்த பாவத்தின் காரகங்களில் கஷ்டம் ஏற்படுத்துகிறது. ஆயினும், சுபரின் பார்வை அந்த பாவத்தின் மீது விழும்போது, அந்த கஷ்டங்கள் யாவும் பெரிய அளவில் குறையவோ அல்லது ஒன்றுமை இல்லாமலோ போகிறது. இந்த பாதிக்கப்பட்ட பாவத்திற்கான உறவுகளோடு ஆன உறவில் விரிசலை ஏற்படுத்தி துண்டாக்கும். இவ்வாறாக, 3 ஆம் பாவாதிபதி பாதிக்கப்பட்ட ஜாதகருக்கு அவருடைய இளைய சகோதரர்களுடனான உறவு பாதிக்கப்படும். பாவங்களால் ஆளப்படும் பல்வேறு உறவுகள் –
இலக்னம் – தனது (சுயம்)
2 ஆம் வீடு – குடும்பம்.
3 ஆம் வீடு – இளைய சகோதரம்.
4 ஆம் வீடு – தாய்.
5 ஆம் வீடு – குழந்தைகள், ரகசிய நண்பர்கள்.
6 ஆம் வீடு – தாய் மாமன், எதிரிகள்.
7 ஆம் வீடு – வாழ்க்கைத் துணை, கூட்டாளி.
8 ஆம் வீடு – வாழ்க்கைத் துணையின் குடும்ப உறுப்பினர்கள்.
9 ஆம் வீடு – தந்தை.
10 ஆம் வீடு – மூத்த மகன் (கர்ம புத்திரன்).
11 ஆம் வீடு – தந்தை வழி மாமா, மூத்த சகோதரன், மூத்த சகோதரிகள், நண்பர்கள்.
12 ஆம் வீடு – ரகசிய எதிரிகள்.
இயற்கை சுபர்களான குரு, புதன், சுக்கிரன், சந்திரன் ஆகியோர் உறவுகளின் நீண்ட ஆயுளுக்கும், ஆரோக்கியத்திற்கும் நலம் புரிகிறார்கள். இயற்கை அசுபர்களான சூரியன், செவ்வாய், சனி, இராகு, கேது ஆகியோர் இதற்கு மாறான பலனைத் தருகிறார்கள். 3 ஆம் பாவத்தில் இருக்கும் அசுபர் குறைவான சகோதரர்களையும், 5 ஆம் பாவதிநில் உள்ள அசுபர் குழந்தைப் பிறப்பில் கஷ்டங்களையும், குறைவான குழந்தைகளையும் அளிக்கிறது.
         இலக்னம்
        இலக்னம் முதலில் ஒரு கேந்திர மாகும். இரண்டாவதாக ஒரு திரிகோண பாவம். எனவே, அனைத்து ஜாதகருக்கும், குறிப்பிடும்படியாக அனுகூலமான பாவமாகும் என பராசரர் குறிப்பிடுகிறார். இந்த இலக்ன பாவம் பாதிப்பு அடைந்தால், முழு ஜாதகமும் பாதிப்படைகிறது. அசுபர் இப் பாவத்தில் இருக்க, தீங்கை விளைவிக்க முடியும். ஆயினும், அது கேந்திர பாவமாதலால், அதே அசுபக்கிரகம், தனது சொந்த வீட்டிலோ, அல்லது உச்ச வீட்டிலோ இடம் பெறுமானால் (செவ்வாய், சனி) இரு பெரும் யோகமான மகா புருஷ யோகத்தைத் தரவல்லது. அவை பஞ்ச மகா புருஷ யோகங்களான -  ருசக மற்றும் மற்றும் சச யோகங்களாகும். இவ்வாறாக, மகா பருஷ யோகம் ஏற்படும் போது, பாவக்கிரகங்கள், பாவத்திற்கு தீங்கு விளைவிக்காமல் முன்னேற்றத்தையே அளிக்கிறது. இலக்னத்தில் இடம் பெறும் கிரகங்களின குணாதிசயங்களின் அடிப்படையில், இயற்கை சுபாவத்திலும், குணாதிசயங்களிலும் கிரகங்கள் அளிக்கும் தாக்கத்தை அடுத்து வரும் பத்திகளில்  ஒவ்வொரு கிரகமாகக் காணலாம்.
         சூரியன் – தேன் நிறம், பழுப்பு கலந்த மஞ்சள் நிற கண்கள், சதுர வடிவான முக அமைப்பு, பித்தம், புத்தி கூர்மை, குறைந்த அளவு கேசம் உடையவர்.
         சந்திரன் – இவர் வாதம் கபம் உடையவர். அறிவாளி, வட்ட முக அமைப்பு, அழகிய கண்களை உடையவர். இனிய பேச்சை உடையவர். சஞ்சல மனதை உடையவர். எதிர்பாலர் மீது ஆர்வமுடையவர்.
         செவ்வாய் – இவர் கொடுரமான மற்றும் இரத்த சிவப்பான கண்களை உடையவர். (குரூர). நிலையற்ற மற்றும் தடுமாறும் மனதை உடையவர்.( சபல ) பித்தம் உடையவர். மிகவும் கோபம் உடையவர். மெலிந்த இடுப்பு மற்றும் தேகம் உடையவர்.
         புதன் – மிகச் சிறந்த குணம் உடையவர். அற்புதமான மற்றும் அழகானவர். மிகவும் மிருதுவான, அழகான தோலை உடையவர். நகைச்சுவையில் அதிக விருப்பம் உடையவர். வாத, பித்த, கபம் ஆகிய மூன்றும் கலந்து உடையவர்.
         குரு – மிகவும் குண்டான உடலமைப்பு உடையவர். பழுப்பு நிற கேசமும், கண்களும் உடையவர். கபம் உடையவர். அறிவுடையவர், எல்லா சாத்திரங்களும் அறிந்தவர்.
         சுக்கிரன் – கவர்ச்சி மிக்கவர். அற்புதமான உடலமைப்பு உடையவர், அழகிய கண்களை உடையவர். கவிஞர், மிகுந்த கபம் உடையவர். வாத தொந்திரவு உடையவர். சுருட்டையான முடி உடையவர்.
         சனி – மெலிவான நீண்ட உடல்வாகு உடையவர். பழுப்பு நிறக் கண்களை உடையவர். வாதம் உடையவர்.  நீண்ட பற்களை உடையவர். சோம்பேறித்தனம் உடையவர். முடமானவர். உடல் முழுவதும் தடிமனான ரோமம் உடையவர்.
        இராகு மற்றும் கேது – புகை வடிவிலான தோற்ற முடையவர். நீல நிற உடல் உடையவர். காடுகளில் வசிப்பவர். மிகவும் பயங்கரமானவர். வாத உடல் உடையவர். மிக்க அறிவுள்ளவர். கேதுவுக்கும் இதுவே பொருந்தும்.
        இலக்னம் - தன்னையும், ஒருவரின் தோற்றத்தையும் குறிப்பதால் அதிலுள்ள கிரகங்களின் தாக்கம் அந்த நபருக்கு ஏற்படுகிறது. இலக்னத்தில் பல கிரகங்கள் இடம் பெற்றோ, பார்வை பெற்றோ இருக்குமானால் அந்த அனைத்து கிரகங்களாலும் கொடுக்கப்பட்ட மனப்பாங்கு/விசேஷ குணம், உருவ அமைப்பு கொண்டு இதன் காரணமாக பரந்த மனப்பான்மை கொண்டவராக ஜாதகர் இருப்பார். இவ்வாறான ஜாதகர்கள், அரசர்களாக இருப்பர் என பல சாத்திர நூல்களும், தற்கால நூலின்படி தகுதியுள்ள தலைவர்களாகவும், இயற்கையிலேயே தலைவர்களாகவும் உருவெடுப்பர் எனக் கூறப்பட்டுள்ளது. இது சனிக்கு மரண காரக ஸ்தானமாகும். எனவே, சனியின் இயற்கையான காரகமான ஆயுள் இதனால் முக்கியமாக பாதிப்பு அடைகிறது. எனினும் மஹா புருஷ யோகம் ஏற்பட்டால் இந்த பாதிப்பு மாறுபட்டு, இந்த மரண காரக அவஸ்தை ரத்தாகிறது.
         இலக்ன பாவத்திற்கான மாறுபட்ட காரகங்கள் –
         சூரியன் – ஆன்மா, ஆரோக்கியம் மற்றும் வீரியம் (ஆண்மை).
         சந்திரன் – உடல்.          குரு – புத்தி கூர்மை, சனி கேசம்.
        இலக்னத்தின் மீதான, மாறுபட்ட கிரகங்களின் பாதிப்புகள், அவை இந்த மாறுபட்ட காரக கிரகங்களோடு ஊடுருவும் தன்மையை அடிப்படையாகக் கொண்டே அமைகிறது. இருவரும் நடப்பு கிரகங்களாக இருப்பின், இந்த காரகத்துவ பலன்களை அதிகரிக்கச் செய்கிறது. அவ்வாறில்லையெனில் அதாவது நண்பர்களாக இல்லையெனில், இந்த கிரகங்களே மிகவும் மோசமான பாதிப்புக்குக் காரணமாகிவிடுகிறார்கள். எனினும், பலம் பொருந்திய கிரகங்கள் (உச்ச வீடு, சொந்த வீடு, நட்பு வீடுகளில் உள்ள) பலமற்ற கிரகங்களைக் காட்டிலும் மிகக் குறைந்த அளவே அசுப முடிவைத் தருகின்றன.
        ஒவ்வொரு கிரகமும், வேறொரு வீட்டிற்கும் காரகராகிறார் என்பதையும் நினவில் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட வீடுகளில் இருந்து துர் ஸ்தானங்களில் (6,8,12) இடம்பெற்றால் அந்த ஜாதகரின் துரதிர்ஷ்டம் அந்த வீட்டுடைய நிகழ்வுகளில் இடம் பெறுகிறது. உதாரணமாக, இலக்னத்தில் சனி இடம்பெற்று, அவர் ஆயுள் ஸ்தானத்திற்கும் (8 ஆம் இடம்) காரகராகி, 8 ஆம் பாவத்திற்கு 6 ஆம் பாவமான இலக்னத்தில் இடம் பெற்றுள்ளதால், ஆயுளைக் குறைக்கும். இதே போன்று, எதிரிகளுக்கு காரகமான செவ்வாய் இலக்னத்தில் இடம் பெற்று, எதிரிகளுக்குக் காரகமான 6 ஆம் வீட்டிலிருந்து, இலக்னம் 8 வது வீடாகையால் 6 ஆம் வீட்டை பாதிப்பு அடையச் செய்கிறது. இவ்வாறாக, இந்த ஜாதகரின் கைகளால் எதிரிகளுக்கு கஷ்டங்களைத் தருவதற்கு செவ்வாயின் நிலை காரணமாகிறது.
         இலக்னத்தில் அல்லது முதல் வீட்டில் கிரகங்கள்.-  “அர்கலா” என்ற கருத்து மற்றுமொரு கருத்தில் கொள்ளவேண்டிய முக்கிய பொருளாகும். இலக்னத்திலுள்ள கிரகங்கள் 12 ஆம் வீடு, 3 ஆம் வீடு மற்றும் 10 ஆம் வீடுகளின் மேல் “அர்கலா” உடைத்தாயிருக்கிறது. இலக்னத்தில் உள்ள அசுப கிரகங்கள் 11 ஆம் வீட்டின் மீதும் “அர்கலா” உடைத்ததாய் இருக்கிறது. கிரகங்கள் இலக்னத்தில் இருந்து, இந்த நான்கு இடங்களின் தாக்கத்தைப் பாதிப்பு அடையச் செய்கிறது. இக்னத்தில் சுப கிரகங்கள் இடம் பெற்றால், அவை நல்ல காரியங்களுக்கான செலவை உயர்த்துகிறது.(12 ஆம் வீடு) சகோதரர்களின் முன்னேற்றத்தில் உயர்வைத் தருகிறது (3 ஆம் வீடு) ஒருவரின் மதிப்பையும், மரியாதையையும் (10 ஆம் வீடு) புகழையும் அதிகரிக்கச் செய்கிறது. மேலும், வருமானங்களையும் அதிகரிக்கிறது (11 ஆம் வீடு). இதுவே, இலக்னத்தில் அசுபக் கிரகம் இடம்பெற்றால், இதற்கு எதிர்மறையான விழைவுகளை ஏற்படுத்துகின்றன.
         சூரியன் – இலக்னத்தில் சூரியன் தரும் அனுகூலமான பலன்கள் – குறைந்த அளவே கேசத்தை உடைய வழுக்கைத் தலை, அகன்ற நெற்றி, கௌரவமான, சாத்வீகமான குணமுடையவர். நல்ஆரோக்கியம், அறிவு கூர்மை, கற்றறிந்தவர், அறிவு மிக்கவர், பாண்டித்தியம் மிக்கவர், பராக்கிரமம் மிக்கவர், புகழுடையவர்,. வெற்றியில் ஆர்வம் உடையவர், ஊக்கமுடையவர், அதிகார தோரணை உடையவர், இயற்கையாகவே தலைமைக்குத் தகுதியானவர், பித்தம், மூர்க்கமான குணம் உடையவர், சூடானவர், குறைவாக்குப் பேசக்கூடியவர், செல்வந்தர், எல்லைகளைச் சேர்ப்பவர், (சிம்மம்) பெண்களின் தந்தை (கன்னி) ஆகியவை ஆகும்.
         அனுகூலமற்ற பலன்கள் – மந்த குணம் ( தாமசம் ), பிடிவாத குணம், கொடூர குணம், மன்னிக்காத குணம், அலைந்து கொண்டிருப்பவர், கர்வம் மிக்கவர், செல்வ நிலையில் ஏற்ற இறக்கம் உடையவர். படிப்பில்லாதவர். அதிகாரமற்றவர், சந்ததியற்றவர், கண்ணற்றவர், பெண்களுக்கு அடங்கி நடப்பவர் (மீனம்),. கட்டிகளால் கஷ்டம், தலையில் நோய், கண் கோளாறுகள், கண்புறை, மாலைக்கண்,(சிம்மம், கடகம்) இதய நோய், (மகரம்) மனைவி இழத்தல்/நன்றி மறந்தவர்(கன்னி). ஆகியவை ஆகும்.
         சந்திரன் – அனுகூல பலன்கள் – அழகு மிக்க, சந்தோஷமான, பலம் பொருந்திய உடல்வாகு, சாத்திர அறிவு உடையவர், அறிவு, புத்திகூர்மை மிக்கவர், சமார்த்தியம் மிக்கவர், சம்பாஷிக்கிற மற்றும் செல்வம் மிக்கவர் ஆவார்.
         அனுகூலமற்ற பலன்கள் – நிலையற்ற மனம், ஓய்வற்ற நிலை, பலவீனமான உடல்வாகு, காது கேளாமை, வாய் பேச இயலாதவர் ஆகியவை ஆகும்.
         செவ்வாய் - அனுகூலமான பலன்கள் – செல்வம் மிக்க, பலம்மிக்க உடல்வாகு உடைய, குண்டான உடல், பெரிய தொப்பை, சிவந்த கைகள், பராக்கிரமம் மிக்க, ஆரோக்கியமான, உக்கிரமான, மூர்க்கமான, அரசரால் / அரசாங்கத்தால் கௌரவிக்கப்படுதல், நீண்ட ஆயுளை உடையவர், இயற்கைக் காட்சிகளை ரசிக்கும் ஆர்வம் உடையவர் ஆகியவை ஆகும்.
         அனுகூலமற்ற பலன்கள் – எப்போதாவது மன அமைதியுடைய, கட்டிகள் மற்றும் காயங்களின் தழும்பு உடைய, குழந்தைப் பருவத்தில் பல நோய்களால் அவதியுறுதல், திருட்டுத்தனம், முட்டாள்தனம், கோபாவேசம், நிலையற்ற மனம், மனதில் குழப்பம், தொல்லைகள், தீங்கு விழைவிக்கின்ற குணம், அற்ப ஆயுள் ஆகியவை உடைய, ஒரு சில குழந்தைகள், அசிங்கமான தோற்றம், மூட்டுவலி, கண்நோய், விபத்துகள், கால் கைகளில் காயங்கள், மனைவியை இழத்தல், மனைவியைக் கொடுமைப் படுத்துதல், தீய நடவடிக்கைகளால் கெடுதலான விழைவுகளுக்கு ஆளாகுதல் ஆகியவை காரகங்களாகும்.
         புதன் – அனுகூலமான பலன்கள் – கௌரவமான, கற்றறிந்த, விரைவில் விவாகம் நடக்கும், அநேக இடங்களுக்குப் பயணப்படுவதில் ஆர்வம் உடையவர், ஆன்மீக தலங்களுக்குப் பயணம், மந்திர, தந்திரங்களில் ஆர்வம், ஆவிகளின் தாக்கத்தில் இருந்து மக்களை விடுப்பதிற்கான சக்தி, மென்மையான பேச்சு, மதசம்பந்தமான, பக்திப் பாடல்களைக் கேட்பதில் ஆர்வம், மன்னிக்கும் தன்மை, இரக்கமுள்ள இதயம் ஆகியவை உடையவர். சொத்தினால் இலாபம், கல்விக் கூடங்கள், முன்னேற்றத்தில் மேன்மை, நல் ஆரோக்கியம், தோலின் மேல் மிளிரும் தங்க ஒளி, ஜோதிடத்தில் ஆர்வம், சகோதரர்கள் மூலமாக சந்தோஷம், மதாபிமானம், கலைத்திறன், கவிதை, இலக்கியம், கணிதம், ஆயுத உபயோகம், குண்டான உடல், அழகான, சொந்த நாட்டைப் பற்றிய அறிவு, மிகுந்த சாஸ்திர அறிவு, இனிய மற்றும் சாதுர்யமான சொற்பொழிவு, நீண்ட ஆயுள், பாலாரிஷ்டத்தை அழித்தல் (*மற்ற கிரகங்களால் ஏற்படக்கூடிய) சிறந்த மருத்துவர் / குழந்தைகளின் முன்னேற்றம், எந்தவொரு நோய்களாலும் கஷ்டமில்லாதவர்கள். அப்படி ஏதேனும் நோய் ஏற்பட்டால் அது மிகவும் சிக்கலான நோயாக இருக்கும் ஆகியவையே காரகங்களாகும்.
       அனுகூலமற்ற பலன்கள் – தோல் வியாதியால் கஷ்டம், பித்தம் மற்றும் மஞ்சள்காமாலை நோயால் தொல்லை, மூடமான கால்கள், தரமான மனிதர்களுக்கு எதிர்ப்பு, கண்நோய் அவதி, சகோதரர்களிடம் விரோதம், கபடம், பாலியல் சந்தோஷத்தில் ஏமாற்றம் மற்றும் துர் தேவதைகளை வணங்குபவன், இடதுகண் பார்வை இழப்பால் கஷ்டம் (சனி இணைவால்) விரும்பத்தகாத மனிதர்களுக்காக செலவழித்தல் ஆகியவை காரகங்களாகும்.
        குரு – அனுகூலமான பலன்கள் – கௌரவமான தோற்றம். நல்லகுணம், நட்பான, சிறந்த பேச்சாளர், கற்று தேர்ந்த, சாஸ்திரங்களில் சிறந்த தேர்ச்சி, வேத அறிவு, அநேக குழந்தைகள், குழந்தைகளால் சந்தோஷம், சந்தோஷம், நீண்ட ஆயுள், பயமற்ற, பொறுமையான, மரியாதைக்குரிய, நல்லொழுக்கம் உள்ள, தரும சிந்தனை, கொடை வள்ளல், புனித யாத்திரை சென்று கொண்டேயிருத்தல், புகழ் மிக்க, ஆடம்பரத்தால் சந்தோஷம், இன்பங்கள் ஆகியவை காரகங்களாகும். 
         அனுகூலமற்ற பலன்கள் – பாவகாரியங்களில் ஈடுபடுதல், நிலையற்ற மனம், மத்தியதர வாழ்க்கை, குழந்தையற்ற, நன்றியில்லாத, முழுவதும் உண்மையில்லாத தற்பெருமை, அன்பானவர்களையும், அருகானவர்களையும் புறக்கணித்தல், பயணத்தை விரும்புதல், மற்றவர்களை எதிர்த்தல், துக்ககரமானவர் ஆகியவை காரகங்களாகும்.
         ஜாதக பாரிஜாதத்தில் கூறப்படுவதாவது – பலம்மிக்க குரு கேந்திரங்களில் இருக்க, சிவபெருமானை சிரத்தையாக தொழுவதால், குரு அனைத்து அரிஷ்டங்களையும் அகற்றி, பக்தர்களின் அனைத்து பாவங்களையும் அழிக்கிறார்.
         சுக்கிரன் – அனுகூலமான பலன்கள் – அழகான, கவர்ச்சி மிக்க, அனைவரையும் கவரக்கூடிய, மென்மையாக பேசுகின்ற, நீண்டநாள் வாழ்தல், கணிதத்தில் தேர்ச்சி மிக்க, சாஸ்திரங்களைக் கற்றுத் தேர்ந்த, மனைவியால் அன்பு செலுத்தப்பட்ட, ஆபரணங்களின் மேல் ஆசைமிக்க, அழகிய மற்றும் சிறப்பாக உடை உடுத்துகிற, எதிர்பாலரால் மிகவும் விரும்பப்படுகிற, செல்வம் மிக்கவர் ஆகியவை காரகங்களாகும்.
        அனுகூலமற்ற பலன்கள் – திருட்டு எண்ணம், ஏமாற்றுதல், வாதம், பித்த நோய்களால் தொல்லை, உற்பத்திக்கு உதவும் உறுப்புகளில் நோய், இரு மனைவிகள் (சுக்கிரன் 6,8,12 இல் இருக்க), மாறிக் கொண்டே இருக்கிற அதிர்ஷ்டம், இரக்கமற்ற இரும்பு மனம் கொண்டவர் ஆகியவை அனுகூலமற்ற காரகங்களாகும்.
         சனி – அனுகூலமான பலன்கள் – ( சொந்த மற்றும் உச்ச வீட்டில் மட்டும் ) ஜாதிக்குத் தலைவனாகவும், உயர்ந்த பதவியிலும் மற்றும் நிலையிலும் இருப்பார்.
         அனுகூலமற்ற பலன்கள் – முடக்குவாதம், பித்தம், பிச்சைக்காரனாதல் ( சந்திரனின் பார்வை பெற ), ஏழை, நோயுற்ற, சுத்தமற்ற, குழந்தைப் பருவத்தில் வியாதியால் தொல்லை, தெளிவற்ற பேச்சு, சோம்பேறி / மந்தமான, பேராசையுள்ள, கவலைமிக்க, குறுகிய மனங்கொண்ட, எதிரிகளை வெல்லக் கூடியவர் ஆகிய காரகங்களாகும்.
        இந்த நபர் எப்போதும் திருப்தியற்றவராகவும், பேராசை பிடித்தவராகவும், தூரப்பார்வை உடையவராகவும், அதிக ஆசையுள்ளவராகவும், மற்றவர்களின் முன்னேற்றம் பார்த்து பொறாமை படக்கூடியவராகவும், அதன் காரணமாக மன அமைதி இழப்பராகவும் இருப்பார். எனினும், சொந்த அல்லது உச்ச வீட்டிலோ அல்லது மீனத்திலோ, தனுசுவிலோ இடம்பெற்றால் அந்த நபர் பேரும், புகழும் பெறுவார்.
         இராகு – அனுகூலமான பலன்கள் – எதிரிகளை வெல்வார், மற்றவர்களின் உதவியோடு முயற்சிகளில் வெற்றி அடைவார். சிம்ம, கடக மற்றும் மேஷ இலக்னங்களில் இராகு இருக்க சிறப்பான பலன்கள் ஏற்படும்.
         அனுகூலமற்ற பலன்கள் – உடலில் தொல்லைகள், மணவாழ்க்கையில் கஷ்டங்கள்.
         கேது – அனுகூலமான பலன் – சிறந்த பேச்சாளர், கல்வியில் வெற்றி பெறுவார். கேதுவின் தேவதா கணேசனை வணங்கித் தொழ அனைத்தும் சித்தியாகும்.
        அனுகூலமற்ற பலன்கள் – மெலிந்த உருவம், ஒழுக்கமற்ற மணவாழ்க்கை..
         இலக்ன பாவம் அமரும் ஒவ்வொரு கிரகமும் தரும் பற்றிய அனுகூல மற்றும் அனுகூலமற்ற பலன்களைக் கண்டோம். இனி மற்ற பதினோறு பாவங்களில் கிரகம் தரும் பலன்களை வரும் மாதங்களில் தொடர்ந்து எழுதுகிறேன், நண்பர்களே ! நன்றி ! வணக்கம் வாழ்க வளமுடன் !   
            

No comments:

Post a Comment